பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக் கட்டட நிதிக்காக 5 லட்சம் ரிங்கிட் நிதி !

- Muthu Kumar
- 27 Feb, 2025
(ஆர்.ரமணி)
செபராங் ஜெயா, பிப். 27-
பினாங்கு மாநிலத்தின் பழைமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி புதிய இணை கட்டட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்திய நிதி திரட்டும் தேநீர் விருந்து சிறப்பாக நடைபெற்றது. தி லைட் நட்சத்திர விடுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பினாங்கு மாநில
வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்ப்பள்ளி சிறப்புக்குழுத் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவருடன் பல முக்கிய தொழிலதிபர்கள், சமூக சேவையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்றனர். பள்ளியின் வளர்ச்சிக்காக மொத்தம் 5 லட்சம் ரிங்கிட் திரட்டப்பட்டது 1952ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி கடந்த 73 ஆண்டுகளாக பினாங்கில் தமிழ் மொழி, கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போதைய மாணவர் சேர்க்கை 455 ஆக உயர்ந்துள்ளதால், கணினி அறை. நூலகம், அறிவியல் ஆய்வகம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் போன்ற வசதிகளை உருவாக்க புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காகவே இந்த நிதி திரட்டும் விருந்து நடத்தப்பட்டது என பள்ளி மேலாளர் வாரியக் குழுவின் தலைவரான டத்தோ சுரேஷ் தெரிவித்தார் இதில் முதன்மை விருந்தினராக பங்கேற்ற டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு தனிப்பட்ட முறையில் 30,000 ரிங்கிட் நன்கொடை வழங்கினார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரசு உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்தார். "நான் பொறுப்பில் இருக்கும் போது, தமிழ்ப்பள்ளிகளுக்காக உதவியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பது என் முன்னுள்ள மிக முக்கிய பணியாகும். பினாங்கில் ஏழு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கி, அவற்றை மேம்படுத்தும் முயற்சியில் அரசு உறுதியுடன் செயல்படும். என அவர் உறுதியளித்தார்.
புதிய கட்டடத்திற்காக பாடுபடும் மேலாளர் குழு பள்ளியின் மேலாளர் குழுத் தலைவர் டத்தோ சுரேஷ், மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொடர்ந்து கட்டட வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்தார். இந்த நிதி திரட்டும் விழா, தமிழ்ப்பள்ளிக்கான வளர்ச்சி முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 5 லட்சம் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளமை, கல்வியை நேசிக்கும் சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த இணை கட்டடம் விரைவில் திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,
பினாங்கு மாநிலத்திலேயே சிறந்த கட்டிடவசதிகளுடன் கூடிய ஒரு முன்னோடி தமிழ்ப்பள்ளியாக பாரதி பள்ளி உருமாறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *