தமிழர் திருநாள் தந்தை தமிழவேள் கோ.சாரங்கபாணி!

top-news
FREE WEBSITE AD

(நிர்மலாதேவி பன்னீர்செல்வம்)

தமிழே தன் உலகம் என வாழ்நாளை தமிழுக்காகவே அர்ப்பணித்தவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி. அவரைப் பற்றி அறியாதோர் நம் நாட்டில் உண்டோ? அவர் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20.4.1903இல் பிறந்து, தமது 21ஆவது வயதிற்குப் பிறகு சிங்கப்பூரை வசிப்பிடமாகக் கொண்டு, சிங்கப்பூரிலும் நம் நாட்டிலும் தமிழுக்கென அடித்தளம் அமைத்தவர்.

மலாயா என்று பெயர்பெற்ற காலத்திலும் நம் நாட்டிலும்,சிங்கப்பூரிலும் பல்வேறு வகையான தமிழ்த் தொண்டு ஆற்றியவர். 200 ஆண்டுகளைக் கடந்தும் நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் வாழ்கிறதென்றால், அன்று அவர் விதைத்த விதை என்று தைரியமாகக் கூறலாம்.




தமிழில் தமது முதல் முன்னெடுப்பாக, சிங்கப்பூரில் "முன்னேற்றம் எனும் பத்திரிகையில் துணையாசிரியராக தமது எழுத்துப் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு, 1930 ஆம் ஆண்டில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "முன்னேற்றம் பத்திரிகையில் பல சீர்திருத்தக் கருத்துகளையும் பகுத்தறிவுக் கட்டுரைகளையும் துணிச்சலாக எழுதத் தொடங்கிய அவர், 1934இல் "தமிழ் முரசு செய்தி இதழை வாரந்தோறும் வெளியிட்டார். கிள்ளான் சாலையில் அமைந்திருந்த தமிழர் சீர்திருத்தச் சங்க இல்லத்தில்தான் “தமிழ் முரசின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. ஒரு காசு விலையில் வார இதழாகத் தொடங்கப்பட்ட "தமிழ் முரசு". 200 இதழ்கள் விற்றுத் தீர்ந்தன.

அதன் பின் ஒரு வருட காலகட்டத்திற்குள் வாரத்திற்கு மூன்று நாள் என வெளிவரத் தொடங்கியது. 3000 பிரதிகளை விற்று, விற்பனையிலும் உயர்ந்திருந்தது. குறுகிய காலத்திலேயே இப்பத்திரிகை மக்களிடையே அதிக செல்வாக்கைப் பெற்றதால், 1935ஆம் ஆண்டு தொடங்கி இவ்விதழ் தினசரி இதழாக வெளிவரத் தொடங்கியது. இந்நாளிதழின் வழியாகவே மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம், எழுத்தாளர் பேரவை என்று பல்வேறு அமைப்புகளை அமைத்து தமிழ்ச் சேவைகளைத் தொடர்ந்தார்.




இது தவிர "தமிழ் முரசு". அவ்வப்போது ஆண்டு மலரையும் வெளியிட்டு வந்தது. அவ்வாண்டு மலர்கள் வழி, அதிகமான புனைவிலக்கியங்களும் உயிர்பெற்றன. புனைவிலக்கியங்களுக்கு அதிக முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டது. மேலும், எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டிற்கும் தூணாக நின்று ஆதரவினை வழங்கியது. இன்று நம் நாட்டில் நவீன இலக்கியம் வேரூன்றி நிற்கக் காரணம், அன்றே அதற்கான அஸ்திவாரத்தைக் கோ.சா. அமைத்ததுதான்.

இப்படி அவரின் முயற்சியால் உருவாக்கம் கண்ட 'தமிழ் முரசு' இதழையே சமூக தொடர்பு சாதனமாகவும் மக்களுக்கான எழுச்சிக் குரலாகவும் அமைத்துக் கொண்டார். வசதி குறைந்தவர்கள் மீது கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்தினார். தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளைப் பேசுவதற்கும், ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் 'தமிழ் முரசினை' ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மலேசியாவின் மிகப் பழைமையான முன்னணி இந்திய இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக விளங்கிய மணிமன்றம், நாட்டின் இந்தியர்களுக்கு தமிழ் பாரம்பரியத்தைக் காக்கும் பெரிய தளமாக விளங்கியது. இதுதவிர, எழுத்தாளர் பேரவையின் வழி, ஆங்காங்கு இருந்த படைப்பாளிகளை ஒரு குடைக்குள் ஒன்றிணைத்த பெருமையும் கோ.சா.வையே சேரும்.

இவரின் மாபெரும் முன்னெடுப்பு இலைமறைகாயாக இருந்த நாட்டிலுள்ள பல கவிஞர்களை, எழுத்தாளர்களை வெளிச்சத்திற்குக் காட்டியது. எழுத்தாளர்களின் திறமையைப் பட்டை தீட்டும் முயற்சியாக அவர்களுக்கென மாதந்தோறும் பல்வேறு போட்டிகளையும் நடத்தி வெற்றி கண்டவர் கோ. சா. அவர்கள். அவர் நடத்திய போட்டிகளில் குறிப்பிடத்தக்கவை, விருத்தப்பாப் போட்டி, சிறுகதைப் போட்டி, வெண்பாப் போட்டி ஆகியவை அடங்கும். அப்போட்டிகளில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு உடனுக்குடன் சிறந்த பரிசுகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்; அவர்களுக்கென நாட்டில் அடையாளத்தை ஏற்படுத்தினார்.

கோ.சா. அவர்களின் இடைவிடாத முயற்சிகளுள் மற்றொரு சிறப்புமிக்க ஒன்று. 'தமிழர் திருநாள்.தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழர் பண்பாட்டையும் காப்பதற்கும், எதிர்கால தலைமுறையினரிடம் நம் தாய்மொழியைக் கொண்டு சேர்ப்பதற்கும் அவர் எடுத்த பெரும் முன்னெடுப்பு இது எனலாம்.ஜனவரி 13, 1952 அவர் தொடக்கி வைத்த "தமிழர் திருநாள்” நாளடைவில் அனைவரும் கொண்டாடி மகிழும் மிகப்பெரிய ஒற்றுமைத் திருநாளாகவும் பண்பாட்டு நிகழ்ச்சியாகவும் உருவெடுத்தது. இன்றுவரை அது தொடர்ந்தும் வருகிறது.

இன்று நாட்டின் மூத்த பல்கலைக்கழகமாகத் திகழும் மலாயாப் பல்கலைக்கழகத்தில், பல சவால்களை எதிர்கொண்டு தமிழ்மொழிக்கென இந்திய ஆய்வியல் துறையை அமைத்தவர் கோ.சா. அக்காலகட்டத்தில் நாட்டில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் என்பதால், ஆய்வியல் துறையில் தமிழ்மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் “தமிழ் முரசு இதழ் மூலம் தொடர்ந்து குரல் எழுப்பினார். இது தொடர்பாக, தமிழர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இடம்பெறவும் அத்துறை சிறப்பாகச் செயல்படவும், நிதி திரட்ட இடைவிடாது உழைத்தார் என்பதற்கு 1950களில் "தமிழ் முரசு இதழில் வெளிவந்த செய்திகளே தக்க சான்று.

பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கியபோதும், தாம் எடுத்த முயற்சியிலிருந்து சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து போராடினார். அதன் விளைவு, 1956ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை தொடங்கப்பட்டது.அதோடு மட்டும் அவரது முயற்சி நின்றுவிடவில்லை. "தமிழ் எங்கள் உயிர் எனும் நிதித் திட்டத்தை உருவாக்கினார். இத்திட்டத்திற்குப் பேராதரவு கிடைக்கவே, அதன் வழி திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்தியப் பகுதியின் நூலகத்திற்குத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கிட வழி அமைத்தார். ஒரு சிறந்த தமிழ்ப்பிரிவுக்கான நூலகத்தையும் அமைத்து வெற்றியும் கண்டார்.




தமிழுக்காக ஆற்றிய தொண்டுகளில் ஒன்றாக, அவ்வப்போது தமிழ்நாட்டிலிருந்து
தமிழ்ச் சான்றோர்களையும் அறிஞர்களையும் மிகச் சிறந்த தலைவர்களையும் நம் நாட்டிற்கு அழைத்து வந்து நம் நாட்டுத் தமிழர்களிடையே தமிழுணர்வை ஊட்டினார். நம் மொழியின்பால் அதிக பற்றை ஏற்படுத்தினார். அவ்வாறு. 1955ஆம் ஆண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார் நம் நாட்டிற்கு வருகையளித்தபோது, கோ. சா. அவர்கள் தன்னலம் பாராது தமிழுக்காக ஆற்றி வரும் சேவைக்காக "தமிழவேள் எனும் சிறப்பு விருதை வழங்கி அவரை சிறப்பு செய்தார்.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம் மண்ணில் தமிழ்மொழியின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தம் வாழ்நாளையே அர்ப்பணித்த மாபெரும் தலைவர், தொண்டர். நம் நாட்டில் தமிழ்மொழி எங்கெல்லாம் மணந்து மணம் கமழ்கிறதோ, அங்கெல்லாம் தமிழவேளின் பாதச்சுவடுகள் நிரம்பியிருக்கும் கட்டாயம். தமிழ்வேள் கோ.சா. ஆற்றிய அரும்பணிகளுக்காக 2003ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா நம் நாட்டிலும்,சிங்கப்பூரிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.அதன் சாரமாக, "கோ.சாரங்கபாணி கல்வி அறநிதி அமைக்கப்பட்டது.

நம் நாட்டில் தமிழவேள் அவர்களின் புகழை நிலைக்கச் செய்யும் வண்ணம், பிப்ரவரி, 2016ஆம் ஆண்டு லுனாஸ், கெடா மாநிலத்தில் நிறுவப்பட்ட தமிழ்ப்பள்ளிக்கு "கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டது.


அந்நாளைய பிரதமரான நஜிப் துன் ரசாக்கால் அதிகாரப்பூர்வமாகப் அப்பள்ளி திறப்பு விழா கண்டது. நாட்டின் 525ஆவது தமிழ்ப்பள்ளி கோ.சா.வுக்காக சமர்ப்பணம் ஆனது காலத்தால் அழிக்க இயலாத வரலாறு. இன்றைய தேதியில் அப்பள்ளியில் ஆண்டு 1 முதல் 6 வரை 462 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் திருமதி கோ.நவமணியின் தலைமையில் இப்பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.


“தமிழர் திருநாள் "எனும் ஒற்றை நாளில் மட்டுமல்லாது, ஒவ்வொரு நாளும் தமிழவேள் அவர்களின் புகழைப் பாடிக் கொண்டாட வேண்டும். இன்றைய இளைஞர்களிடையே கோ.சா. தமிழுக்கு ஆற்றியிருக்கும் சேவைகளைப் பற்றிக் கூறி, தமிழ்மொழியின்பால் ஈர்ப்பினை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளில் "தமிழவேள் கோ. சாரங்கபாணியின் பிறந்தநாளைச் சிறப்பு தினமாக ஏற்படுத்தி, அவர் சார்ந்த தகவல்களைப் பரிமாறி, அவரின் மகத்தான சேவைகளை எடுத்துக் கூறி வளரும் குழந்தைகளிடம் அவரின் பெருமைகளைக் கொண்டு சேர்த்திடல் வேண்டும்.

இவையாவும் தொடருமாயின், நம் நாட்டில் இருநூறு ஆண்டுகள் என்ன? ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழை வாழவும் தமிழால் ஆளவும் செய்திடலாம்.


கட்டுரை

(நிர்மலாதேவி பன்னீர்செல்வம்)

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *