ஜப்பான் நாட்டுத் தூதருடன் பினாங்கு மேயர் டத்தோ ராஜேந்திரன் நல்லிணக்கச் சந்திப்பு!

- Muthu Kumar
- 02 Mar, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, மார்ச் 2-
மலேசியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் மச்சிடா ஷின்யா, பினாங்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அ.ராஜேந்திரனை சந்தித்து அளவளாவி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டின் துணைத் தூதரான, குரோயி கோசுக்கே என்பவரும் உடன் வருகையளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நாட்டின் வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பில், ஜப்பானியத் தூதர்கள் பினாங்கு மேயரிடம் பற்பல அம்சங்களை முன் வைத்து அளவளாவி மகிழ்ந்த வேளையில், கட்டடங்கள், தடையற்ற மின்னிணைப்பு வசதிகள், தொடர்வண்டிச் சேவை, வர்த்தக நுணுக்கங்கள், சுற்றுலாத் துறை மேம்பாடு போன்ற பல்வேறான துறைகள் தொடர்பில் கருத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான நட்புறவு அம்சங்களுக்கு, பினாங்கு மாநிலம் ஓர் உன்னத பங்களிப்பை, தாராளமாக வழங்க முடியுமென்று நம்பிக்கை தெரிவித்த அவ்விரு தூதர்களின், கருத்துகளுக்கு ஆதரவாக, நன்றி பாராட்டிய ராஜேந்திரன், இரு தரப்புக்கும் இடையிலான கூட்டுறவு உடன்பாடுகளுக்கு தாம் என்றென்றும் துணை நிற்பது திண்ணமென்றும், அத்தகைய ரீதியில் மாநகர் மன்றத்தின் வாயிலாக, தாம் சிறப்பான வகையில் ஒத்துழைக்க இயலுமென்றும் உறுதி கூறினார்.
பல்வேறு துறைகளில் துரித வளர்ச்சி கண்டு, தனித்துவச் சிறப்புடன் திகழும் பினாங்கு மாநிலப் புகழுக்கு மாநகர் மன்றத்தின் பாராட்டத்தக்க நடவடிக்கைகள் பெரிதும் துணை நிற்கும் உண்மையை தாம் அறிவதாகக் கூறிய மச்சிடா ஷின்யா, ஜப்பானிய கூட்டுறவு நடவடிக்கைகளுக்கு மாநில ரீதியாக மாநகர் மன்றம், தடையற்ற ஒத்துழைப்பை வழங்க இயலுமென்று தாம் பெரிதும் நம்புவதாக விவரித்தார்.
பினாங்கு மாநில வளர்ச்சிக்கு வித்திடும் எல்லா விதமான அம்சங்களுக்கும் கை கொடுக்கும் வகையில் தமது தோழமை உணர்வான பங்களிப்பு இருக்குமென்பதை மறுப்பதற்கில்லை எனவும் எடுத்துரைத்த ராஜேந்திரன், மாநகர் மன்றம் வாயிலாக மாநிலத்தின் மேம்பாட்டிற்கு துணை நிற்பதில் தமக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்து இருந்ததேயில்லை எனவும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.
Duta Jepun ke Malaysia, Machida Shinya, bertemu Datuk A. Rajendran, Datuk Bandar Pulau Pinang, membincangkan pembangunan infrastruktur, pengangkutan, dan pelancongan. Rajendran menegaskan komitmen MBPP dalam kerjasama dengan Jepun, sementara Machida yakin Pulau Pinang akan terus menyumbang kepada hubungan erat antara kedua-dua negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *