தினமும் படுக்கும் முன் இரண்டு கிராம்பை வாயில் போட்டு கொண்டால் ஏற்படும் நன்மை!

- Muthu Kumar
- 06 May, 2025
தினந்தோறும் இரவு படுக்க போகும் முன்பு 2 கிராம்புகளை போட்டுக்கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை சிந்தனைப் பூங்காவில் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதளபக்கத்தில் கூறியிருப்பதாவது: தினமும் இரவு படுக்கும்முன் 2 கிராம்பை வாயில் போட்டு மென்றால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சமையலில் மிக முக்கிய நறுமணப் பொருளாக பயன்படுத்தப்படும் கிராம்பு அடிப்படையில் ஒரு மருத்துவ மூலிகையாகும். இது இந்திய மருத்துவத்திலும் ஆயுர் வேதத்திலும் முக்கிய பொருளாக கருதப்படுகிறது. இதை வெறும் வாயில் மென்று சாப்பிடும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
கிராம்பில் உள்ள சத்துக்கள்
கிராம்பு பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே,வைட்டமின் சி, நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களோடு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.இது ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். இது ஒரு கிருமி நாசினியாகவும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
கிராம்பில் 70 முதல் 90% வரை யூஜெனால் என்ற பொருள் உள்ளது. அதேசமயம் அசிடைல், யூஜெனோல், வெண்ணிலின், டானின்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் போன்ற எண்ணெய் பொருட்களும் அடங்கியுள்ளன.இந்த கிராம்பு எண்ணெய் பற்பசை தயாரிப்பிலும், பல் சிகிச்சைக்கும், மயக்க மருந்திலும் , சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை வெளியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரையின் அளவை சீராக்கும் கிராம்பு
இன்றைய இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் ஏராளம். இது ஒரு வளர்சிதை மாற்றக் காரணியால் ஏற்படும் பிரச்சினை என்பது நமக்குத் தெரியும். ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கு அடிப்படையான விஷயமே கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தச் செய்வது தான். அதை உணவின் வழிதான் சிறப்பாக செயல்படச் செய்ய முடியும். அதில் கிராம்புக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
சர்க்கரை நோயாளிகள் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்பட்டு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் கிராம்பின் எண்ணெய் கூட இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது.கிராம்பில் உள்ள வைட்டமின் சி உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய காலக்கட்டத்தில் இதனை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கிராம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்வதோடு, பற்களில் ஏற்படும் வலியையும் குறைக்கிறது.எனவே பல் வலி, ஈறுகளில் வலி இருந்தால் அந்த இடத்தில் கிராம்பு வைப்பது சிறந்தது. அதேபோல் வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம். கிராம்பை பொடி செய்து, அதை சிறிதளவு எடுத்து வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
கிராம்பில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்கள் இருப்பதால் அவை கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது.
இதனால் கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறுகின்றன. இதில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.கல்லீரலை சுத்தம் செய்வதோடு. கல்லீரலில் படியும் கொழுப்புக்களையும் குறைத்து கொழுப்பு கல்லீரல் பிரச்சினையை தீர்க்க உதவியாக இருக்கிறது.
வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரிசெய்ய
காலையில் கிராம்பை உட்கொள்வதால் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது.இதனால் வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
செரிமானத்தை இலகுவாக்குவதால் வயிறு மந்தம். வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளையும் சரிசெய்ய முடியும்.
கிராம்பில் உள்ள சாறு அதிக கொழுப்பின் காரணமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.கிராம்பை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்பை குறைக்க முடியும்.
நம்முடைய உடல் எடை மற்றும் கல்லீரல் கொழுப்பைக் குறைக்க முடியும். இதனால் உடல் எடை இழப்பில் கிராம்பு மிக முக்கிய பங்காற்றுகிறது.
கிராம்பில் உள்ள ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் ஆகியவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.நம்முடைய தினசரி உணவில் கிராம்பை சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்வதோடு, மூட்டு வலி ஆகியவற்றைக் குறைக்கச் செய்யும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
தலைவலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இதற்காக ஒரு கிளாஸ் பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும்.இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் நுரையீரல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணித்து பாக்டீரியாக்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.
கிராம்பு அழற்சி இருப்பவர்கள் இதனை பயன்படுத்தக் கூடாது. இவர்கள் கிராம்பு சாப்பிடுவது அல்லது அதன் எண்ணெய்யை சருமத்தில் தடவுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.கல்லீரல் நோய் ஹீமோபிலியா போன்ற இரத்தப்போக்கு அல்லது இரத்தம் உறைதல், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைதல் அல்லது உணவு அழற்சி இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.அதேபோல் ஒரே நேரத்தில் கிராம்பு மாத்திரை, க்ரீம் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். இது அளவு அதிகமாக்கி பாதிப்பை உண்டாக்கும்.
கிராம்பை அப்படியே வெறும் வாயில் போட்டு லேசாக கடித்து, அப்படியே வாயில் அடக்கி வைத்துக் கொண்டு, அப்படியே அதன் சாறை உமிழ்நீருடன் விழுங்கிக் கொள்ளலாம். இதுதான் கிராம்பு சாப்பிட மிகச் சிறந்த வழி.
கிராம்பை வெறும் வாயில் சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். கிராம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போல தேன் கலந்தும் குடிக்கலாம். அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் ஆரோக்கியமாக அமையும். குழந்தைகளுக்கு உணவு வழியாக கிராம்பை சேர்க்கலாம்.
கிராம்பை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.ஆனால் படுக்கைக்கு முன் அவற்றை உட்கொள்வது இரட்டிப்பு பலனை அளிக்கிறது.இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் 2 கிராம்பை மென்று சாப்பிட வேண்டும்.பின் ஒரு கிளாஸ் சூடான நீரைக் குடிக்கவும். இதனால் இரைப்பை பிரச்சினைகள், வயிற்றுப் பிடிப்புகள், முதுகுவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதயத் துடிப்பு சீராக இருக்கும். உடலில் ஆக்சிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும். இவ்வாறு ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை சமூகவலைதள பக்கத்தில் இருந்து எடுத்தது. எனவே இதை சாப்பிடும் முன்னர் மருத்துவ ஆலோசனையை கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *