பள்ளிகளுக்கு வெளியில் வியாபாரிகளின் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!

- Muthu Kumar
- 23 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 23-
பள்ளிகளுக்கு வெளியில் வியாபாரம் செய்து வருவோர் விவகாரத்தைக் கையாள, ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று, கல்வி இயக்கவாதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.அக்குழுவில் பள்ளி நிர்வாகங்களும் ஊராட்சிமன்ற அதிகாரத் தரப்பினரும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று. கல்வியில் பெற்றோர்களுக்கான மலாக்கா மாநில நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த மாக் சீ கின் தெரிவித்துள்ளார்.
தமது பள்ளிக்கு வெளியில் ஒரு வியாபாரியிடம் சவ்வு மிட்டாய் வாங்கி உண்ட பிறகு அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி, நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் அண்மையில் பரிதாபமாக மரணமடைந்து இருக்கின்றான்.
பினாங்கின் பட்டர்வெர்த் தேசிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஃபாமி ஹஃபிஸ் என்ற மாணவனுக்கு நேர்ந்திருக்கும் இத்தகைய சம்பவம், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வரும் ஒரு தடை மீதான அமலாக்கம் குறித்து கவலையை ஏற்படுத்தி இருப்பதாக மாக் கூறினார்.
"பள்ளிக் கூடங்களின் நுழைவாயிலுக்கு வெளியில் மாணவர்களினால் இன்னமும் எப்படி உணவுகளை வாங்க முடிகிறது? இது, யாரை நோக்கியும் விரல்களை சுட்டிக் காட்டும் விவகாரமல்ல. ஆனால், பள்ளிகளுக்கு வெளிப்புறங்களில் அத்தகைய வெளி வியாபாரிகளின் அங்காடிக் கடைகள் முதலில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட வேண்டும்" என்று எஃப் எம்டியிடம் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஃபாமி ஹஃபிஸ் என்ற மாணவன், கடந்த செவ்வாய்க்கிழமை, பட்டர்வெர்த்தில் உள்ள சுங்கை டுவா தேசிய தொடக்கப் பள்ளிக்கு வெளியில் இருந்த ஓர் அங்காடிக் கடையில் சவ்வு மிட்டாயை வாங்கி இருக்கின்றான்.அதை வாயில் போட்டு சுவைத்துக் கொண்டிருந்த அவனின் தொண்டையில் அந்த சவ்வு மிட்டாய் சிக்கி மூச்சுவிட சிரமப்பட்டு, அன்றைய இரவு 11 மணியளவில் பினாங்கு மருத்துவமனையில் மரணமுற்றான்.
பள்ளிக்கு வெளியில் வியாபாரம் புரிவோரைத் தடுப்பது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டிய மாக், வியாபார லைசென்சுகளை வெளியிடும் ஊராட்சி மன்றத் தரப்பினரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றார். “நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை ஊராட்சி மன்றங்கள் மட்டுமே கொண்டிருக்கின்றன.
ஆனால், பள்ளிக்கூடங்களுக்கு அருகில் எப்போதும் வராத ஊராட்சிமன்ற அமலாக்க அதிகாரிகளை எங்களால் எப்படி நம்பியிருக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில்,பள்ளிக்கூடங்களுக்கு வெளியில் உள்ள அங்காடிக் கடைகளை அகற்றும் அதிகாரம் ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் இருக்கும் பட்சத்தில், அத்தகைய அதிகாரத்தை கல்வி அமைச்சு கொண்டிருக்க இல்லை என்று. கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கூறியதாகக் கூறப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *