உண்மைத் தகவலை சரிபார்த்து சட்ட நடவடிக்கையை தவிர்ப்பீர்- பாஸ் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்!

- Muthu Kumar
- 22 Feb, 2025
கோலாலம்பூர், 22 .
அவதூறு வழக்குகளில் சிக்குவதைத் தவிர்க்க, பொதுவில் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர், தங்களின் தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்குமாறு கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் பாஸ் கட்சி துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.இதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும் என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தாங்கள் வசிக்கும் பதவிகள் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் வெளியிடும் அறிக்கைகளும் கட்சியுடன் இணைக்கப்பட்டு பேசப்படும் என்று பகாங் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
ஆதலால், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதை தவிர்க்க தாங்கள் வெளியிடும் அறிக்கைகளின் உண்மைத் தன்மையை பாஸ் தலைவர்கள் சரிபார்க்க வேண்டியது மிக முக்கியம். தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்குத் தொடுக்கும் ஆபத்தில் நாம் இருக்கின்றோம். கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும்.
“அதனால், பாஸ் கட்சியின் தோற்றத்தை கட்சியின் அனைத்து தலைவர்களும் உறுப்பினர்களும் அவசியம் பாதுகாக்க வேண்டும். கட்சித் தலைமைத்துவத்தின் நம்பகத்தன்மையையும் அவர்கள் தற்காக்க வேண்டும் என்று. எஃப்எம்டிக்கு வழங்கியுள்ள ஒரு நேர்க்காணலில், குபாங் கிரியான் நாடாளுமன்ற உறுப்பினருமான துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
தாம் ஆற்றியிருந்த ஓர் உரையில், தங்களை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டி ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அவரின் மகன் லிம் குவான் எங் மற்றும் திரேசா கோக் ஆகியோர் தொடுத்திருந்த ஓர் அவதூறு வழக்கில், அம்மூவருக்கும் 8 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்குமாறு, பாஸ் கட்சியின் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டில் உத்தரவிட்டிருந்தது.
கிட் சியாங்கும் குவான் எங்கும் மறைந்த, மலாயா கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சின் பெங்கின் உறவினர்கள் என்றும் திரேசா கொக், குவான் சியூவின் உறவினர் என்றும் சித்தி மஸ்துரா கூறியிருந்தார். மஸ்துரா மேல்முறையீடு செய்திருக்கின்றார்.
இதனிடையே, பேராக் மாநில பாஸ் தலைவர் ரஸ்மான் ஸக்காரியாவும் பல சர்ச்சைக்குறிய விவகாரங்களில் சிக்கியுள்ளார்.2022ஆம் ஆண்டில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் எல்ஜிபிடி (லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம் திருநங்கை) நடைமுறைகளை மன்னித்ததாகக் கூறியதற்காக, ரஸ்மான் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. ரஸ்மான் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட பிறகு 2023ஆம் ஆண்டு பிப்ரவரியின் அவ்வழக்கு தீர்க்கப்பட்டது.
இந்நிலையியில், ஒரு பேரணியின்போது, அதில் பங்கேற்றவர்களில் சிலர் சீன நாட்டு தேசியக் கொடியை அசைத்த சம்பவத்துடன் ஜசெக உதவித் தலைவர் ஙா கோர் மிங்கை சம்பந்தப்படுத்திய பின்னர், கடந்த ஆண்டில் அந்த மன்றத்துறை அமைச்சரிடம் மன்னிப்புக் கோருமாறு ரஸ்மான் கட்டாயப்படுத்தப்பட்டார்.
கடந்த மாதம் ரஸ்மான் மற்றொரு மன்னிப்பைக் கோரியிருந்தார். இம்முறை அவர், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோவிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். ஓய்டிஎல் கார்ப்பரோஷன் நிறுவன உரிமையாளரான இயோ குடும்பத்துடன் ஹன்னா இயோவை அவர் தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.அண்மையில் தாம் ஆற்றியிருந்த ஓர் உரையில் அவதூறான கருத்துகளை தாம் வெளியிட்டதாகக் கூறி, தமக்கு எதிராக வழக்குத் தொடுக்க ஹன்னா இயோ எண்ணம் கொண்டிருப்பதாகவும் ரஸ்மான் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *