பாஸ் தலைவர் பதவிக்கு ஹாடியை எதிர்த்துப் போட்டியிட யாருக்கும் துணிவு இல்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 22-

பாஸ் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட கட்சியில் எந்த ஒரு தலைவருக்கும் துணிவு இருக்காது. அதனால், ஹாடி அவாங்கே அக்கட்சித் தலைவராக நீடிப்பார் என்று. அரசியல் ஆய்வாளர் ஒருவர் கணிப்புத் தெரிவித்திருக்கின்றார்.

வரும் செப்டம்பரில் பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற விருக்கும் வேளையில், ஹாடி அவாங்கே தலைவர் பதவியை விட்டு விலகினால் மட்டுமே அப்பதவிக்குப் புதிய தலைவர் ஒருவர் கிடைப்பார் என்று, அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாவ் ஷி வேய் தெரிவித்துள்ளார்.

"ஹாடி அவாங்கே தலைவர் பதவியை விட்டு விலகினால் தவிர, அவர் பாஸ் கட்சியில் இருக்கும் மற்றும் உயிருடன் இருக்கும் வரையில், யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடாது என்று கட்சி உறுப்பினர்கள் நினைக்கின்றனர். அதனால், தலைவர் பதவி ஹாடி அவாங்கிற்கு சொந்தமானதாகவே நீடித்திருக்கும்.

"ஹாடியை எதிர்த்துப் போட்டியிட அல்லது சவால் விடவிருக்கும் எவரையும் நான் இப்போதைக்கு பார்க்கவில்லை என்று, எஃப்எம்டியிடம் தெரிவித்த லாவ், ஆனால், கட்சியின் மூன்று உதவித் தலைவர்கள் பதவிகளுக்கான தேர்தலில் நான்கு மந்திரி பெசார்கள் குறிவைத்திருக்கலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

"பாஸ் கட்சி பெர்லிஸ், கெடா. கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், கட்சியில் மூன்று உதவித் தலைவர் பதவிகள் மட்டுமே இருக்கின்றன."பாஸ் கட்சியில் வழக்கமாக, மந்திரி பெசார்கள் அல்லது தேசிய அளவில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள்தான் உதவித் தலைவர்களாக இருப்பார்கள்.

“இதன் காரணத்தினால்தான், அம்மூன்று பதவிகளுக்காக பலர் போட்டியிடுவதை தவிர்க்கும் முயற்சியாக, கடந்த முறை கெடா மந்திரி பெசார் சனுசி நோர் அப்பதவிக்கான போட்டியிலிருந்து விலகிக் கொண்டிருந்தார்.
கட்சித் தலைவர் பதவியை ஹாடியே தொடர்ந்து வகித்து வரவேண்டும் என்பதற்காக, கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுமாறு தாம் முன்மொழியப்பட்டால், அதை தாம் கட்டாயம் நிராகரித்துவிடப் போவதாக, அதன் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

மிகவும் கடினமானது என்று கருதப்படும் தலைவர் பதவி பொறுப்பை சுமக்கும் தகுதி தமக்கு இல்லை என்று தாம் உணர்வதால், அப்பதவிக்குப் போட்டியிட தாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று, உதவித் தலைவரும் திரெங்கானு மாநில மந்திரி பெசாருமான சம்சூரி மொக்தார் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு ஆகக் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டில்தான் தேர்தல் நடந்திருப்பதால், இம்முறை அவ்விரு பதவிகளுக்கும் போட்டியிருக்கலாம் என்று கூறப்பட்டதாக கடந்த திங்கள்கிழமை எஃப்எம்டி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் தலைவர் பதவியை வகித்து வரும் ஹாடி. இம்முறை தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதிலிருந்து விலகி இருந்தால் மட்டுமே அப்பதவிக்குப் போட்டியிருக்கக் கூடும் என்றும் அக்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறியிருந்தார்.இந்நிலையில், லாவ் கூறியிருப்பதுபோல் பாஸ் கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்று, அதேபல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஷாஸா சுக்ரி என்பவர் கூறியுள்ளார்.

'இப்போதைக்கு ஹாடியை எதிர்த்து யாரும் போட்டியிடமாட்டார்கள். பாஸ் தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. அதனால் தலைவர் பதவிக்குச் சவால் விட யாருக்கும் எந்த ஒரு காரணமும் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *