கொள்ளை லாபம் அடிப்பதால் மருத்துவமனைகள் பங்குச் சந்தையில் இடம்பெறக் கூடாது!

- Muthu Kumar
- 04 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 4-
பங்குச் சந்தையில் இடம்பெற மருத்துவமனைகளுக்கு தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மலேசியாவும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸெ சின் நேற்று மக்களவையில் வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. இதனால், நோயாளிகளிடமிருந்து மிக அதிகமான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முடிவு கட்டுவதற்கு பங்குச் சந்தையில் இடம்பெற மருத்துவமனைகளுக்குத் தடை விதிக்க வேண்டியது அவசியமாகும் என்று பக்காத்தான் ஹராப்பானின் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சிம் வலியுறுத்தினார்.
மருத்துவமனைக் கட்டணங்கள் ஏன் அதிகமாக உள்ளன? இந்த தனியார் மருத்துவமனைகள் லாப நோக்கத்துடன் செயல்படுகின்றன என்பதே இதற்கு காரணமாகும். புர்ஸா மலேசியா பங்குச்சந்தையில் இடம்பெற்றிருப்பதால், மூன்று மாதங்களுக்கு
ஒருமுறை தங்களின் வருமானத்தை அவை அறிவிக்க வேண்டியிருக்கிறது என்றார் அவர்.
இந்தக் காரணத்தினால்தான் கட்டணங்களை அங்கும் இங்கும் உயர்த்தி அதிக லாபக் கணக்கைக் காட்ட அம்மருத்துவமனைகள் முயல்கின்றன. இதுவொரு கெடுதியான போக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் மக்களின் உயிரைக் காக்க வேண்டுமேயல்லாது வர்த்தகப் பொருளாக அவை மாறக்கூடாது என்று மக்களவையில் துணை விநியோக மசோதா மீதான விவாதத்தின்போது சிம் அறிவுறுத்தினார்.
இதற்கு தென்கொரியாவை மலேசியா ஒரு முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அண்மையில் என்னைச் சந்தித்த தென் கொரியத் தூதர் ஒருவர், தம்முடைய
நாட்டில் மருத்துவமனைகள் பங்குச் சந்தையில் இடம்பெறத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.மக்களின் உயிரைக் காப்பதே மருத்துவமனைகளின் பணியாக இருக்க வேண்டுமே அல்லாது லாபம் ஈட்டுவதாக இருக்கக் கூடாது என்று அத்தூதர் கூறியதாக சிம் கூறினார்.
தனியார் மருத்துவமனைகளில் முகக் கவசங்களும் ரப்பர் கையுறைகளும் அதிக விலையில் விற்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஐம்பது முகக் கவசங்கள் அடங்கிய பெட்டி ஐந்து வெள்ளிக்கு விற்கப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வொரு முகக் கவசமும் தலா இரண்டு வெள்ளிக்கு விற்கப்படுகிறது. இது இரண்டாயிரம் மடங்கு விலை உயர்வாகும். மறுபுறம், மருத்துவக் கையுறைகளும் அதிக விலையில் விற்கப்படுகிறது.100 கையுறைகள் அடங்கிய பெட்டியை பத்து வெள்ளிக்கு கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் ஒரு ஜோடி கையுறைகளின் விலை இருபது வெள்ளியாக உள்ளது என்று சிம் கூறினார்.
Ahli Parlimen Sim Tze Tzin mencadangkan Malaysia mencontohi Korea Selatan dengan melarang hospital disenaraikan di bursa saham. Beliau menegaskan hospital swasta berorientasikan keuntungan, menyebabkan caj tinggi kepada pesakit. Harga barang keperluan perubatan juga melambung tinggi di hospital swasta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *