சிங்கப்பூர் தேர்தலில் மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி!

- Muthu Kumar
- 04 May, 2025
சிங்கப்பூரின் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் மே 3-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 97 இடங்களில் மக்கள் செயல் கட்சி 87 தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. கடந்த தேர்தலைப் போலவே பாட்டாளிகள் கட்சி, 10 இடங்களில் வென்றது.
இந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் விரைவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைவர் ஸ்பென்சர் இங் கூறுகையில், எதிர்க்கட்சிகளிடம் போதுமான ஒற்றுமை இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் தர்மன், ஒவ்வொரு வாக்காளரும் யாருக்காக வாக்களித்திருந்தாலும் சிறந்த வருங்காலம் வேண்டும் என்பதில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். பிற நாடுகளைப் போல அரசியலில் நம்பிக்கை இழப்பு, பிளவுவாத நிலை எதுவும் இல்லை. இதே நிலைமை வெகுகாலம் நீடிக்க வேண்டும். இந்தப் பொதுத் தேர்தலில் முழு முயற்சியுடன் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை அங்கு மக்கள் செயல்கட்சிதான் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே வெற்றியைப் பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலிலும் மக்கள் செயல் கட்சி பிரம்மாண்ட வெற்றியை அறுவடை செய்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *