தைப்பூசத் திருநாளில் என்ன செய்ய வேண்டும்?

- Shan Siva
- 10 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 10: அழகன் முருகனை ஆராதிக்கும் திருவிழா தைப்பூசம்.
தமிழர்களின்
சிறப்புக்குரிய மாதமான தை மாதத்தில் கொண்டாடப்படும் தைப்பூசம் தினம் முருகப்பெருமானுக்கு
விசேஷ நாளாகும்.
ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி
திதியும் ஒன்று கூடி வரும் திருநாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
பழங்காலத்திலிருந்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் உன்னத திருநாள் இது.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டதை தேவாரப்
பதிகங்கள் குறிப்பிடுகின்றன. திருஞானசம்பந்தர் தனது பதிகத்திலும் இதுகுறித்து
பாடியுள்ளார்.
பிற்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தைப்பூசத்
திருநாளன்று கூத்துகள் நடத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும்
விதத்தில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் கல்வெட்டுகள் சாட்சி கூறுகின்றன.
அறுபடை வீடுகளாகப் போற்றப்படும் முருகப் பெருமானின்
கோயில்கள் அனைத்திலும் இந்த தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
குறிப்பாகப் பழனி முருகன் கோயிலில் தைப்பூசம் திருநாள் 10 நாட்கள் வெகு விமர்சையாக
நடைபெறும்.
தைப்பூசத் திருவிழாவானது இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா,
தென்னாப்பிரிக்கா,
மொரிஷியஸ்,
போன்ற
நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதிலும் மலேசியா பத்துமலை திருத்தலத்தில்
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் தைப்பூச திருவிழா உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
தைப்பூசத் திருநாள் அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு
முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் முருகன் கோயிலுக்குச் சென்று
வழிபாடு செய்து விட்டு முடிந்தால் மற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.
முழுமையாக விரதம் இருந்து மாலை கோயிலுக்குச் சென்று விட்டு
விரதத்தை முடித்துக் கொள்ளலாம்
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்ட திருநாள் இந்த
தைப்பூசத் திருநாள் என்பது நம்பிக்கை. எனவே
திருமணமாகாதவர்கள் இந்நாளில் விரதம் இருந்து மனமுருக வேண்டி வழிபட்டால் விரைவில்
திருமணம் ஆகும் என்பது ஐதீகம்.
மலேசியாவில் நாடு முழுக்க உள்ள ஆலயங்களில் தைப்பூசத்திற்கான
நேர்த்திக்கடன்களை, வேண்டுதல்களை பக்தர்கள்
நிறைவேற்றி வருகின்றனர். விதவிதமான காவடிகளோடு, அலகு குத்தி ஆடுவதோடு, முட்டிக்கால் போட்டு
படியேறி பால்குடம் எடுக்கும் பக்தர்களும் உருகி வேண்டி இத்திருநாளில் இறையருள் பெறுகின்றனர்.
பிற சமூகத்தினரும் ரத ஊர்வலத்தின் போது பாதயாத்திரை செல்லும்
பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானங்கள்
வழங்கி பக்தியைக் கொண்டாடுவது மலேசிய பல்லினத்துவத்திற்கு ஓர் அடையாளம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *