ஹமாஸால் சிறை பிடிக்கப்பட்ட தாயாரும் அவரது இரு மகன்களும் மரணம்!

- Muthu Kumar
- 19 Feb, 2025
ஹமாஸ் படைகளால் சிறை பிடிக்கப்பட்ட தாயாரும் அவரது இரு மகன்களும் மரணமடைந்துள்ளதாக ஹமாஸ் படைகள் தகவல் வெளியிட்டுள்ளது, அவர்கள் குடும்பத்தினரை கொந்தளிக்க வைத்துள்ளது.மூவரின் சடலங்களும் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளன.
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலின் போது கடத்தப்பட்ட பணயக்கைதிகளில் 5 வயதான ஏரியல் பிபாஸ், அவரது பிஞ்சு சகோதரர் 2 வயதான கஃபிர், மற்றும் இவர்களின் தாயார் 33 வயதான ஷிரி ஆகியோரும் அடங்குவர்.
ஷிரி தமது பிள்ளைகள் இருவருடன் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் காணப்படும் புகைப்படம் இஸ்ரேல் முழுவதும் தீயாக பரவியது. இந்த நிலையில், ஷிரி மற்றும் அவரது இரு மகன்களும் மரணமடைந்துள்ளதாக தற்போது அறிவித்துள்ள ஹமாஸ் படைகள், இவர்களின் சடலங்களுடன் மேலும் 6 பணயக்கைதிகளை வியாழக்கிழமை விடுவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹமாஸ் விடுவிக்க இருப்பதாக அறிவித்துள்ள 6 பேர்களின் அடையாளங்களை இஸ்ரேல் இதுவரை உறுதி செய்யவில்லை. இதனிடையே, பிபாஸ் குடும்பத்தினர் தெரிவிக்கையில், உறுதியான தகவல் வெளியாகும் வரையில் தங்களின் காத்திருப்பு முடிவடையாது என குறிப்பிட்டுள்ளனர்.
பிப்ரவரி 1ம் தேதி விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளில் ஷிரியின் கணவர் யார்தன் பிபாசும் ஒருவர். காஸாவில் ஹமாஸ் படைகளில் சுரங்கத்தில் 484 நாட்கள் யார்தன் பிபாஸ் சிறையில் இருந்தார்.இஸ்ரேலில் போர் நிறுத்தம் வேண்டும் என குறிப்பிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பெரும் திரளான மக்களில் பிபாஸ் குடும்பமும் கலந்துகொண்டது. பல மாதங்கள் நீடித்த ஆர்ப்பாட்டம் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *