பாஸ் கட்சித் தேர்தலில் ஹாடி-இப்ராஹிமுக்கு பதிலாக இருவர் களமிறங்கலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 18-

இவ்வாண்டு இறுதியில் பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டி ஏற்படக் கூடும் என்று, கட்சிக்குள்ளேயே தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.இவ்விரு பதவிகளுக்கும் போட்டி ஏற்படுமேயானால், கடந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு நடக்க விருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் கட்சித் தலைவர் பதவியை வகித்து வரும் அப்துல் ஹாடி அவாங், இம்முறை தமது தலைவர் பதவியைத் தற்காத்துப் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்தால், தலைவர் பதவியோடு சேர்ந்து துணைத் தலைவர் பதவிக்கும் போட்டி ஏற்படலாம் என்று, தமது பெயரை வெளியிட மறுத்த ஒரு தலைவர் தெரிவித்துள்ளார்.

உடல்நலத்தைக் காரணம் காட்டி, தலைவர் பதவியை விட்டு விலகுமாறு, கட்சியில் உள்ள சில தலைவர்கள் மாராங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடியை வலியுறுத்தி வருவதாகவும் அத்தலைவர் கூறினார்.கடந்த சில ஆண்டுகளில், சிகிச்சைக்காக ஹாடி பல முறை, கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு என்ன நோய் கண்டிருக்கிறது என்பது இதுவரையில் வெளியில் சொல்லப்படவில்லை.

ஹாடியுடன் சேர்ந்து, தாம் வகித்து வரும் துணைத் தலைவர் பதவியிலிருந்து இப்ராஹிம் துவான் மானும் விலகுவார் என்று கட்சிக்குள்ளேயே பேசப்பட்டு வருவதாகத் தெரிவித்த அத்தலைவர், துவான் இப்ராஹிம் தொடர்ந்து அப்பதவியை வகித்துவர வேண்டும் என்று, கட்சியின் உலாமாக்கள் ஆதரவு தரப்பினர் கேட்டுக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

“அதுபோலவே, ஹாடியின் செல்வாக்கு இன்னும் தேவைப்படுவதால், தலைவர் பதவியில் நீடிக்குமாறும் அவரை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.“ஆனால், ஹாடியும் துவான் இப்ராஹிமும் மற்றவர்களுக்கு வழிவிட்டு தங்கள் பதவிகளிலிருந்து விலகுவார்களேயானால், அவ்விரு பதவிகளுக்கும் உலாமாக்களுக்கும் கட்சியின் இதர தலைவர்களுக்கும் இடையில் பதவிப் போராட்டம் வெடிக்கும்.

'ஆனால், கடந்த காலத்தில் மிகவும் ஆக்ரோஷமாக போட்டிகள் நிலவியதை நாம் பார்த்திருக்கின்றோம் என்றாலும், இம்முறை அவ்வாறு நடக்கக் கூடிய சாத்தியம் இருக்காது" என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த கட்சித் தேர்தலை அவ்வட்டாரம் சுட்டிக் காட்டியது. அப்போது போட்டியிட்ட முஹமட் சாபு தமது ஆதரவாளர்களுடன் பாஸிலிருந்து விலகி அமானா கட்சியைத் தொடங்கினார்.அது முதல், பாஸ் கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டதில்லை.

இம்முறை தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்று ஹாடி முடிவு செய்வாரேயானால், திரெங்கானு மந்திரி பெசார் அஹ்மாட் சம்சூரி மொக்தாரும் கிளந்தான் மாநில சட்டசபை சபாநாயகர் முஹமட் அமார் அப்துல்லாவும் தலைவர் பதவிப் போட்டிக் களத்தில் இறங்கக் கூடும்.

இதன் வழி ஓர் உலாமாவுக்கும் ஒரு தொழில்நிபுணருக்கும் இடையில் போட்டி ஏற்படக் கூடும் என்றும் பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியூடின் ஹசானுடன் கைகோர்த்து சம்சூரி களமிறங்கக் கூடிய சூழ்நிலையும் நிலவுவதாகவும் அவ்வட்டாரம் தெரிவித்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *