ரபிஸி தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவராக இருக்க முடியுமா?

top-news
FREE WEBSITE AD

அண்மையில் முடிவுற்ற பிகேஆரின் தொகுதித் தேர்தல்களில் பல முக்கிய தலைவர்களும், எம்பி. சட்டமன்ற உறுப்பினர்களும் தோல்வி அடைந்து புதியவர்கள் பரவலாக வெற்றி பெற்றிருப்பது கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டு இளம் தலைமுறையினர் மக்கள் சேவையில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக நம்பப்படுகிறது.

தொகுதித் தேர்தல்களில் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லிக்கு மிகவும் அணுக்கமான, ஆதரவாளர்கள் பலர் படுதோல்வி அடைந்த நிலையானது கட்சியில் ரபிஸி ரம்லியின் நிலையைத் தள்ளாட வைத்துள்ளதாகப் பரவலான் கருத்து நிலவுகிறது.ரபிஸியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்ததில் திட்டமிட்ட சதி நடந்துள்ளதாகவும் அதில் கட்சியின் சில முக்கிய புள்ளிகள் தலையிட்டு, வேண்டுமென்றே ரபிஸியை கட்சியிலிருந்து துரத்த சூழ்ச்சி செய்திருப்பதாகவும் ரபிஸியின் ஆதரவாளர்கள் முறையிட்டுள்ளனர்.

பல தலைவர்கள் தொகுதிகளில் தோல்வியடைந்திருந்தாலும் அவர்களின் ஆதரவாளர்கள் செயலவைக்கான போட்டியில் வெற்றியடைந்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. தோல்வியடைந்த சிலர் தேர்தல் முடிவை எதிர்த்துப் புகாரையும் பதிவு செய்துள்ளனர்.இந்தப் பிரச்சினை அண்மையில் நடந்த கட்சியின் மத்திய தலைமைத்துவக் கூட்டத்தில் (Central Leadership Committee-MPP) வேண்டுமென்ற கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டு, அதனைக் கட்சியின் தேர்தல் மன்றத்திடம் புகார் செய்யும்படி கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் புஸியா சாலே அறிவுறுத்தியுள்ளார்.

ஷா ஆலம் தொகுதியில் நஜ்வான் ஹலிமியிடம் தோற்ற அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயிலும் ரபிஸி ரம்லியும் மத்திய தலைமைத்துவக் கூட்டத்தில் தேர்தல் பற்றி பல்வேறு குறைகளை எடுத்துக் கூறி, தங்களது நியாயத்தை எடுத்துரைத்த போதும், அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கூட்டத்தில், இணையத்தின் வழி நடைபெற்ற தேர்தலைப் பற்றிய விளக்கம் தரப்பட்டு, அதில் எந்தவொரு சதியும் நடக்கவில்லை என்று கூறப்பட்டது. அதில் தேர்தல் தணிக்கையாளரும் தமது விளக்கத்தை எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிலும் பட்டும் படாமலும், நடுநிலை வகிப்பதாகக் கூறி தமது மற்ற நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.தொடக்கம் முதல், தேர்தல் வெளிப்படையாகவும் எந்தவித பிரச்சினையும் இன்றி நடத்தப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தி வந்துள்ளார். கட்சித் தேர்தலில் அணியாக யாரும் போட்டியிடக் கூடாதென்றும் தேர்தல் முடிவை அனைவரும் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அன்வார் வலியுறுத்தியிருந்தார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய ரபிஸி. தேர்தலில் சதி வேலை நடந்துள்ளதாகப் பலரும் குறை கூறி வருவதால் தேர்தல் முடிவை மறு பரிசீலனை செய்யும் வகையில் தணிக்கை குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.தோல்வி கண்டவர்களில் சிலர் ரபிஸியின் அணுக்க நண்பர்களாக உள்ளனர். குறிப்பாக ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அமாட் நஸாருல்லா முகமட் நாசிர், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியன் சுங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

கட்சியில் தற்போது ரபிஸியிடமிருந்து பலர் விலகிச் செல்வதாகவும், அவரோடு நெருக்கம் காட்டினால் அது தங்களின் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என பலர் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு காலத்தில் கட்சியின் வருங்காலத் தலைவர் என்று வர்ணிக்கப்பட்ட ரபிஸியின் மீது பல்வேறு கேலியான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு அவருக்கு எதிராகச் செய்திகள் வெளியிடப்பட்டு வந்துள்ளது கவலையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தோல்வியுற்ற ரபிஸியின் நண்பர்கள் பிரச்சினைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக பெட்டாலிங் ஜெயா எம்பியான லீ சீயன் சுங், இதற்கு முன்னர் பகாங், செமாம்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2022ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது லீ பகாங்கிலிருந்து பெட்டாலிங் ஜெயாவில் போட்டியிட இறக்குமதி செய்ததே ரபிஸிதான் என்று கூறப்படுகிறது.

ரபிஸியின் கருணையினால் பெட்டாலிங் ஜெயாவிற்கு கொண்டுவரப்பட்ட லீ, அத்தொகுதியின் நடப்புத் தலைவர் ஹீ லோய் சியானுடன் போட்டியிட வைக்கப்பட்டார். ஆயினும் லீயும் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பாஃமி ஙாவும் ஆகியோர் கட்சித் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.

சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினரும் கல்விமானாக இருக்கும் டாக்டர் பாஃமி சிலாங்கூரின் வருங்கால மாநில மந்திரி பெசார் பதவிக்குத் தகுதியானவர் என்று சொல்லப்பட்டது. அவரின் தோல்வியானது கட்சியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ரபிஸிக்கு உற்ற நண்பராக இல்லாதிருந்தும் லீயுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டதால், தோல்வியைத் தழுவியுள்ளார் என்று கருதப்படுகிறது.

ஜொகூர் பாரு தொகுதியின் தலைவரும் எரிபொருள் மற்றும் நீர்வள துணையமைச்சருமான அக்மால் நாசிரின் தோல்வியும் கட்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரிடம் அவர் தோல்வியடைந்துள்ளார்.இந்நிலையில், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினரான ஹசான் அப்துல் கட்சியின் தேர்தல் பற்றிக் குறிப்பிடுகையில், முக்கிய தலைவர்கள் தேர்தலில் தோற்றதற்கு அவர்களின் ஆணவம், எளிதாக திருப்தியடைதல் மற்றும் மேல்தட்டு மனப்பான்மையே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி கற்ற இளைஞர்கள் தற்போது கட்சிக்குள் வருவது அதிகமாக இருக்கும்போது. அவர்கள் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் கட்சியில் உயர் பதவியை அடைய உதவ வேண்டுமென்ற மனப்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. வேறிடத்திலிருந்து ஒரு தொகுதிக்கு பாராசூட்டில் இறக்கப்படும் நபர்களை அத்தொகுதியில் உள்ள உறுப்பினர்கள் எளிதாக ஏற்றுக்கொள்வர் என்று எதிர்பார்ப்பது அறியாமை என்றே கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, பினாங்கு பெர்மாத்தாங் பாவில் அரசியலில் நுழைந்த 34 வயதான பாஹ்மி ஸைனோல் 2022இல் பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று. மாநில ஆட்சிக் குழுவில் நியமிக்கப்பட்டார். அதில் அவர் நிறைவாகச் செயல்பட முடியாமல் போனது. அவர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியாதவராக இருக்கிறார். கட்சித் தேர்தலில் ஜெலுத்தோங் தொகுதியில் அவர் போட்டியிட்டு, அங்கு நடப்புத் தலைவரிடம் தோல்வியடைந்துள்ளார். கட்சித் தேர்தலில் தம்மைத் தோற்கடிக்க மறைமுக சதி நடந்திருப்பதாக ரபிஸி சுட்டிக்காட்டினாலும், கட்சியில் அவருக்கு ஆதரவாகத் தளபதிகள் குறைந்துள்ளது கட்சியில் அவர் இன்னும் மேல் நிலைக்குச் செல்வதற்குத் தடைக்கல்லாக இருப்பதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது.

அரசியலில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமாகவே உள்ளது. எந்தவொரு செயலும் காரணத்தோடுதான் நடக்கின்றது. அரசியலில் தற்செயலாக நடப்பதென்பது மிகவும் குறைவுதான். ஆக, கட்சித் தேர்தலில் ரபிஸி ரம்லியின் நம்பிக்கைக்கு உரியவர்களின் தோல்விக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும்.கட்சியின் படிநிலையில் தலைவருக்கு ஒரு படி குறைவான நிலையில் ரபிஸி இருக்கிறார். அன்வார் இன்னும் 3 ஆண்டுகளில் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினால், ரபிஸியே அப்பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கட்சியில் நிலைப்பதற்கு ரபிஸி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். அவரின் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தோல்வியடைந்து வருகின்றனர். கட்சி உறுப்பினர்களுடனான தொடர்பு மெல்ல மெல்ல அருகி வருகிறது. கட்சியில் அவரின் செல்வாக்கு மங்கி வருகிறது. நடக்கும் நிகழ்வுகள் அவரைக் கட்சியிலிருந்து அகற்றும் சதியா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இந்நிலை தொடர்ந்தால், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டு வெல்ல முடியுமா என்ற ஐயமும் பரப்பப்படுகிறது. கட்சியின் தேசிய மட்ட நிலையில் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னரே, ரபிஸி தொடர்ந்து துணைத் தலைவர் பதவியில் நிலைப்பாரா என்ற முடிவு தெரியவரும்.

ஒரு முற்போக்கு சிந்தனை மிக்க ரபிஸியின் சேவை கட்சிக்கும் கூட்டரசு அரசாங்கத்திற்கும் மிகவும் தேவை என்பதால் அவர் கட்சியில் ஒரு செல்வாக்கான பதவியில் இருந்தால்தான் அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியும். மேலும், இளைஞரான அவரின் சேவையை நாடு இழக்கக்கூடாதென்ற அனுதாபமும் அதிகரித்து வருகிறது.

Pemilihan cabang PKR baru-baru ini menyaksikan ramai pemimpin kanan dan penyokong Rafizi Ramli tewas, mencetuskan spekulasi tentang konspirasi menyingkirkannya. Walaupun Rafizi menuntut siasatan, pengaruhnya semakin merosot dan masa depannya dalam parti kini dipersoalkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *