டெல்லியில் 124 ஆண்டுகளில் இல்லாத மழை!

- Muthu Kumar
- 03 May, 2025
டெல்லியில் நேற்று ஒரே நாளில் சுமார் 77 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இந்த அளவுக்கு மழை பெய்வது கடந்த 124 ஆண்டுகளில் இது 2வது முறையாகும்.
ஏற்கெனவே கடந்த 2021ம் ஆண்டு ஒரே நாளில் 119.3 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது. அதைத் தொடர்ந்து அதிகபட்ச மழை நேற்றுதான் பதிவாகியிருக்கிறது.
மழை குறித்து வானிலை மையம் கூறுகையில், "மே மாதத்தில் ஒரே நாளில் பதிவான இரண்டாவது மிகப்பெரிய மழையாக இது இருக்கிறது. காலை 2:30 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 77 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி இப்படி மழை கொட்டி தீர்த்தது. அரபிக்கடலிலிருந்து வரும் ஈரப்பதம் கொண்ட காற்றும், வங்கக்கடலிலிருந்து வரும் ஈரப்பதம் கொண்ட காற்றும் ஒன்றோடு ஒன்று மோதியதால் இந்த மழை உருவாகியிருக்கிறது.
கீழ் மற்றும் நடுத்தர வளிமண்டல காற்றழுத்த மண்டலும் மழைக்கு முக்கிய காரணமாகும். மழை மட்டுமல்லாது டெல்லியில் சூறைக்காற்றும் வீசியிருக்கிறது. அதாவது சப்தர்ஜங் பகுதியில் 80 கிமீ, பிரகதி மைதானத்தில் 78 கிமீ, பாலம் பகுதியில் 74 கிமீ வேகத்திலும் காற்று வீசியிருக்கிறது. சில இடங்களில் வெப்பநிலை அதிரடியாக குறைந்திருக்கிறது. லோதி ரோட்டில் வெயில் 28.2°C-இலிருந்து 20.7°C ஆக 15 நிமிடங்களில் குறைந்திருக்கிறது. அதேபோல ஜஃபர்பூரில் 28.4°C-இலிருந்து 19°C-க்கு குறைந்துள்ளது" என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
மழை காரணமாக 100க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகியுள்ளன. அதேபோல 40 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. துவாரகா, மின்டோ ரோடு, லஜ்பத் நகர், மெஹ்ரௌலி-பதர்பூர் சாலை, நீம் சௌக், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மழை காரணமாக நஜஃப்கரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ரேகா குப்தா நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டிருக்கிறார்.
அதே நேரம் இந்த மழை சாதாரணமானது கிடையாது. மழைக்காலத்திற்கு முன்பாகவே இப்படி மழை பெய்வது நல்லதில்லை. அடுத்த ஒருவாரத்திற்கு டெல்லியில் மழை தொடரும். காலநிலை மாற்றம் காரணமாக இந்த மழை பெய்திருக்கிறது என்று வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *