பினாங்கு மாநில ஆளுநர் தம்பதியினருக்கு மாநில அரசு சார்பில் பிரியாவிடை!

- Muthu Kumar
- 30 Apr, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு. ஏப். 30-
பினாங்கு மாநில ஆளுநராக அண்மைய பல ஆண்டுகளாக சேவையாற்றி, இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களின் அன்புள்ளங்களை ஈர்த்திருப்பதோடு, ஆளுமைத் திறனில் ஆயிரமாயிரம் பிரியர்களின் அபிமானிகளாகவும் திகழ்ந்து, சமய பேதம் பாராது ஏற்றத் தாழ்வின்றி எல்லோரையும் அனுசரிப்பதிலும் அரவணைப்பதிலும் முன் மாதிரியாகத் திகழ்ந்து வந்த துன் டத்தோஸ்ரீ உத்தாமா அமாட் ஃபூசி அப்துல் ரசாக் தம்பதியினருக்கு மாநில அரசு சார்பில் பிரமாண்டவிருந்துபசரிப்பு நடத்தப்பட்டது.
இன்றோடு ஏப்ரல் திங்கள் 30 ஆம் நாள் பினாங்கு ஆளுநர் பதவியிலிருந்து, ஓய்வு பெறுகின்ற ஆளுநர் தம்பதியினரின் நற்சேவைக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் மரியாதையின் பேரிலும், அவ்விருவரது கடமை உணர்வை பெரிதும் போற்றி வாழ்த்துரைக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும் இங்கிருக்கும் லைட் நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட இந்த விருந்துபசரிப்பில்,மாநிலத்திலுள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களும், அரசியல் மற்றும் அரசுசாரா தரப்புகளின் எண்ணற்ற பிரதிநிதிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் தம்பதியினர், முக்கியப் பிரமுகர்களாக வருகையளித்து, ஆளுநர் தம்பதியினருக்கு நினைவு சின்னத்துடன் தங்களது நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொண்ட வேளையில், இதே பாணியில், இங்கிருக்கும் ஏனைய பல பிரமுகர்களும் தங்கள் சார்பில் நினைவுச் சின்னங்களை வழங்கி, ஆளுநர் தம்பதியருக்கு பிரியாவிடை கூறி, அகம் நெகிழ்ந்தனர்.
மாநில மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரனும் அவரின் துணைவியார் டத்தின் தி.தேவிகாவும் அவ்வாறே ஆளுநர் தம்பதியருக்கு தங்களது நல்வாழ்த்தினையும் நன்றியையும் ஒரேசேர தெரிவித்துக் கொண்டனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு மே திங்கள் முதல் நாள் தொடங்கி, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 30ஆம் நாள் வரையில் ஒரு தவணையாக ஆளுநர் பொறுப்பில் நியமனம் கண்ட துன் டத்தோஸ்ரீஉத்தாமா அஹ்மாட் ஃபூசி அவர்கள், மாநில ரீதியாக நிகழ்ந்திருக்கும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் மனமுவந்து கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களுடனும் புரிந்துணர்வுமிக்கவராக நல்லிணக்கம் கண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோரும், இங்கிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற
உறுப்பினர்களில் அநேகரும் ஆளுநருக்காக நடத்தப்பட்ட இந்த விருந்தோம்பலில் கலந்து கொண்ட வேளையில், முன்னாள் அரசியல் தலைவர்கள் பலரும் தற்போதுள்ள உயர்நிலைப் பொறுப்புகளை வகிக்கும் திரளானப் பிரமுகர்களும் ஆர்வமுடன் வருகையளித்து, ஆளுநர் தம்பதியினருக்கு தங்கள் வாழ்த்துகளை கூறிக்கொண்டனர்.
Satu majlis perpisahan diadakan untuk Datuk Seri Utama Ahmad Fuzi Abdul Razak dan isteri, yang menamatkan perkhidmatan sebagai Yang di-Pertua Negeri Pulau Pinang. Majlis tersebut diadakan di Light Star Hotel, dihadiri oleh ramai pemimpin politik dan pegawai negeri yang memberi penghargaan atas sumbangan beliau sepanjang perkhidmatannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *