சினிமாவுக்காக கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்கின்றனர் -தங்கர் பச்சன் வேதனை!

- Muthu Kumar
- 04 May, 2025
(எம்.முருகன்)
கோலாலம்பூர், மே 4-
கடந்த 35 வருடங்களாக அரசியலைப் பற்றியும் தமிழ் மொழி பற்றியும் வர்த்தகத் துறை பற்றியும் தொடர்ந்து மேடைகளில் பேசி வருகிறேன். ஆனால் இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை. அனைத்தும் தேங்கிய நிலையில்தான் உள்ளது. இதற்கு காரணம் தெளிவான அரசியல் பலமில்லை. அது இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று நேற்று முன்தினம் சிலாங்கூர் கிளப்பில் நடந்த வர்த்தகக் கருத்தரங்கில் நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான தங்கர் பச்சன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியல் பலம் இல்லாததனால் நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம். கூலிக்காரர்களாகவே இருந்து வந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. தமிழர்கள் தமிழைப் பற்றி இன்னும் உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மொழிதான் உறவு. அதை என்றும் மறக்க முடியாது.தமிழ்நாட்டில் எல்லா வளங்களும் உள்ளன. அங்கு தொழில் செய்யாமல் நாம் பிரிந்து நிற்கின்றோம். அந்நியர்கள்தான் வேலை செய்கின்றார்கள். விவசாயம் செய்வதற்குக் கூட தொழிலாளர்கள் இல்லை.
உலகத் தமிழர் மாநாடு, ஏனைய மொழி மாநாடுகளையும் நடத்தினோம். அதனால் என்ன பலன்? தமிழ் வளர்ந்ததா? ஒன்றும் இல்லை. நம் நாட்டில் பெரும்பாலானோர் சாராயக் கடைகளிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். அதிகமான விதவைகளும் மகனை இழந்த தாய் தந்தையரும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இப்படியே இருந்தால் எதுவும் நடக்காது.
தரமான சினிமா மூலம் என்னால் நல்ல விஷயங்களைச் சொல்ல முடியும். மாற்றவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மொழி, பள்ளிக்கூடம் போன்ற தரமான படங்களை இயக்கி மக்களுக்கு கொடுத்தேன். பாராட்டினார்கள். வெளிநாடுகளில் இந்தப் படத்தை வாங்குவதற்குத் தயங்கினார்கள் அமெரிக்காவில் கூட பள்ளிக்கூடம் படம் வெளியீடு கண்டபோது 7 பேர் மட்டும்தான் படம் பார்த்துள்ளார்கள். அமெரிக்காவில் தமிழ்ச்சங்கம் உள்ளது. அங்கு அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தமிழ் மொழிப் படத்தைப் பார்ப்பதில்லை. இது வருத்தமளிக்கிறது.
இப்போது நிலைமை மாறி 60 வயது நடிகர் இளம் பெண்ணுடன் நடனமாடும் படத்தையும் குண்டர் கும்பல் தலைவன் படத்தையும் மலேசியாவில் உள்ள ரசிகர்கள் பார்த்து 100 கோடி, 200 கோடி என்று பணத்தை வீணடிக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி தமிழ் மொழியையும் வர்த்தகத்தையும் பாதுகாப்பது?
தமிழ்மொழியை வளர்க்கிறோம் என்று சொல்லும் மலேசியர்கள் இம்மாதிரியான படத்தைப் பார்க்கலாமா? இதைத் தவிர்க்க வேண்டும். நல்ல படத்தைப் பாருங்கள். நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்மொழியைக் காப்பாற்றுங்கள், தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படியுங்கள். அரசியலை எடுத்துக்கொண்டால் ஆங்காங்கே கற்பழிப்பு, கொள்ளை, விலை உயர்வு என்று தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. சிலர் படங்களில் நடித்து விட்டு மக்களுக்குச் சேவை செய்கிறோம் என்ற நினைப்பில் முதல்வராகும் கனவில் மிதக்கிறார்கள். தமிழ் மொழிக்கு என்று யாரும் உதவுவதில்லை. பெரிய அளவில் திருவள்ளுவர் சிலையைக் கட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரது
திருக்குறள்படி யாரும் நடக்கவில்லை. வாய்கிழியப் பேசுகிறார்கள்.
வெளியே பேசுவது தமிழ்மொழி. உள்ளே பேசுவது வேறு மொழியாக இருக்கிறது. இப்படிச்செய்தால் எப்படி தமிழை வளர்ப்பது? இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ராஜமாணிக்கத்திடம், 40 பேர் வந்துள்ளார்கள். இதனால் எதுவும் மாற்றம் நடக்குமா என்று கேட்டேன். கண்டிப்பாக நடக்கும் என்றார். தமிழர்களுக்கென்று ஒரு வங்கியை வாங்கிக் காட்டுவோம். வர்த்தகத்தை முன்னேற்றுவோம் என்று கூறியுள்ளார். இதற்கு நாம் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.நானும் என் படத்தின் மூலம் நல்ல லாபத்தை திரட்டித் தருவேன். இந்த வர்த்தகம் ஜெயிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி என்றார்.
மேலும் இலங்கை வானொலி அறிவிப்பாளரும் தொலைக்காட்சி புகழ்பெற்றவருமான அப்துல் ஹமிது கூறும்போது, இலங்கையில் தமிழ் வளர்க்க பலர் பாடுபட்டுள்ளனர். மருத்துவத் துறையில் ஒரு மருத்துவர் பல நூல்களை வெளியிட்டு. அவரின் பெயரில் மருத்துவமனையும் இன்று செயல்பட்டு வருகிறது.
எங்கள் தமிழ் அழகான தமிழ். வடிவாக இருக்கும். அந்த நாட்டில் முடிந்தளவு தமிழில்தான் பேசி வருகிறோம். எல்லோரும் தமிழ் மொழிக்காகப் பாடுபடுங்கள். ஊடகத் துறையும் வானொலியும் தமிழ்மொழிக்காக இன்றுவரை பல அர்ப்பணிப்புகளைச் செய்து வருகிறது. இந்த வர்த்தக கருத்தரங்கம் வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்றார்.
மலேசியாவைச் சேர்ந்த மருத்துவர் பாலதர்மலிங்கம் பேசும்போது. தமிழ் நாட்டில் தமிழர்கள் தமிழ் பேசுவதில்லை. ஆங்கிலத்தில்தான் பேசி வருகிறார்கள். ஆனால் மலேசியாவில் அவ்வாறில்லை. அழகான தமிழில் பேசுகின்றனர். மேலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்குகின்றனர். நூல்களை வெளியீடு செய்வதும் தமிழ்க் கவிதைகளை எழுதுவதும் சிறப்பான முறையில் இங்குள்ளது.
தமிழுக்கென்று வானொலியும் ஊடகங்களும் சிறப்பாக பங்காற்றி வருகின்றன. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தமிழைக் காப்பாற்றலாம், தமிழை வளர்க்கலாம். நானும் தமிழை வளர்ப்பதற்காக தமிழிலேயே நாட்டியப் பள்ளியைத் தொடங்கி அதை அரங்கேற்றமும் செய்து வருகிறேன். இந்த வர்த்தக மாநாடு வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்றார்.
இந்த மாநாட்டினை சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜமாணிக்கம் ஏற்பாடு செய்திருந்தார். ஒருங்கிணைப்பாளர்களாக கருணாகரன், டாக்டர் பாலதர்மலிங்கம் பணியாற்றினர். தமிழ்நாடு, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து 40க்கும் பேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டாளர் ராஜமாணிக்கம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Thangar Bachan menyuarakan kekecewaan terhadap kemajuan politik, bahasa Tamil dan perniagaan. Beliau menyeru sokongan terhadap filem bermutu dan usaha melestarikan bahasa Tamil. Program ini turut disokong tokoh media dan usahawan dari pelbagai negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *