பஹல்காம் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் போது ராணுவ வீரர்கள் ஏன் அங்கு இல்லை!

- Muthu Kumar
- 26 Apr, 2025
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது இருக்கிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட அனைத்துப் பாகிஸ்தானியர்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் அட்டாரி எல்லையை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா அறிவித்திருந்தது.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இதில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் சில முக்கிய கேள்விகளை எழுப்பினர். குறிப்பாகத் தாக்குதல் நடந்த பைசரன் புல்வெளி தளத்தில் பாதுகாப்புப் படைகள் ஏன் இருக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தக் கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் உட்பட பலர் இந்தக் கேள்வியை எழுப்பினர்.
இதற்கு மத்திய அரசு ஒரு விளக்கத்தை அளித்தது. அதாவது வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக பைசரன் பகுதியில் பாதுகாப்புப் படை குவிக்கப்படுமாம். அதாவது ஜூன் மாதம் தான் இந்த வழி அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும். அமர்நாத் குகைக் கோயிலுக்கு இந்த பைசரன் புல்வெளி வழியாகச் செல்லும் பக்தர்கள் இங்கு ஓய்வெடுக்கும்போது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்படுவார்கள்.
ஆனால், புனித யாத்திரை சீசன் தொடங்குவதற்கு முன்பே, அதாவது பாதுகாப்புப் படை வீரர்கள் களமிறக்கப்படும் முன்பே, சில உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் இங்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளை இந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியதாக மத்திய அரசு கூறுகிறது.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் வருகை முன்கூட்டியே தொடங்குவது குறித்து உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதன் காரணமாகவே பாதுகாப்புப் படை வீரர்கள் அனுப்பப்படவில்லை என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அதேபோல சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது தற்போது சிந்து நதி நீர் படுகையில் இந்தியாவிடம் போதிய சேமிப்பு திறன் இல்லாத நிலையில், இந்தச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ஏன் நிறுத்தி வைத்தது எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மத்திய அரசு அதிகாரிகள், இந்த அறிவிப்பு உடனடியாக ஏற்படும் விளைவுகள் பற்றியது இல்லை என்றும் இது ஓர் எச்சரிக்கை மற்றும் எதிர்காலத் திட்டத்திற்கான நடவடிக்கை எனத் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *