இன்றைய தலைமுறையினர் அறிவார்ந்தவர்களாக இருக்கின்றனர்

- M.ASAITHAMBY -
- 29 Dec, 2024
வணிகத்துறையில் 50க்கும் மேற்பட்ட படைப்புகளையும் தனது திறமைகளையும் வெளிகாட்டி வந்தவர்தான் பிரேசிலா நாயர். மலேசியாவில் புகழ்பெற்ற நிறுவனங்களான Perodua, Tune Talk, Celcom ஆகிய நிறுவனங்களுடன் கடந்த ஆறு வருடங்களாக வணிக ரீதியில் பல விளம்பர உள்ளடக்கங்களைச் செய்து உதவி வந்துள்ளார்.ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகி வரும் பசங்க 2 எனும் தொடரில் பலரின் மனதில் இடமும் பிடித்துள்ளார் ரேஷ்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரேசிலா நாயர் .
வணிகத்துறையில் ஈடுபட்டிருக்கும் வேலையில்தான் மன்மதன் புல்லட் என்ற மலேசியத் திரைப்படத்தில் எனக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் கிடைத்தது என்று பிரேசிலா கூறினார்.
அதன் பிறகு, கானா, நண்டு ரமேஷ், குபேரன் சாஷி ஆகியோருடன் இணைந்து சாவடிக்ஹகாப் பேய் என்ற திரைப்படத்திலும் நடித்தேன். அப்படத்தில் சுவாதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்பிறகே பசங்க ஒன்று நாடகத்தில் எனக்கு வாய்ப்பும் கிட்டியது. தேவகன்னியும் நானும் சாவடிக்காப் பேய் படத்தில் நடித்தோம். அப்பொழுதுதான் பசங்க 1 படத்திற்கான நேர்முகத் தேர்வு உள்ளது என்று அவர் கூறினார். அவ்வகையில் அந்தத் தேர்வுக்கு நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம்.
பசங்க 1 மற்றும் பசங்க 2-இல் நீங்கள் எதிர் நோக்கிய சவால்கள் என்ன?
பொதுவாகவே படங்கள் என்றால் வசனங்கள் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், தொடர் நாடகம் என்பதால் இதில் வசனங்கள் மிகநீண்டதாக இருந்தது. இந்த நாடகத்தில் 44 எபிசோட்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ரேஷ்மா கதாபாத்திரம் மிகப்பெரிய ஒரு கதாபாத்திரமாகும். ஆதலால், அந்தக் கதாபாத்திரத்திற்கு நிறைய வசனங்கள் இருந்தன. சதீஷ் என்னிடம் இந்த கதாபாத்திரத்தை கொடுக்கும் பொழுதே ‘உங்களால் இதை நிச்சயம் செய்ய முடியும். சிறப்பாக உங்களின் திறமையை வெளி காட்டுங்கள்’ என்று கூறினார். எனவே முதல் முறையாக ஒரு பெரிய கதாபாத்திரத்தை எடுத்து நடிப்பதற்கு எனக்கு சிறிது கஷ்டமாக இருந்தது. ஆனால் பசங்க இரண்டு எனக்கு சுலபமாகவே அமைந்தது எனலாம். ஏற்கெனவே இந்தக் குழுவுடன் இணைந்து நடித்ததால் இந்தப் பதிப்பில் சிறந்த ஒரு படைப்பை வழங்க முடிந்தது.
பிரேசிலாவுடைய தனித்துவம் என்றால் எதுவாக இருக்கும்?
நடிப்புத் துறையில் ஒரு நடிகையாகப் பல தனித்துவத்தை நான் கொண்டுள்ளேன் என்று நம்புகிறேன். அவ்வகையில் வசனங்களை மனனம் செய்வது, வசனங்களுக்கு ஏற்றவாறு முக பாவனைகளைக் காட்டுவது ஆகியவை எனது திறமைகளாக எனது படைப்புகளை மெருகூட்டும் வகையில் இருப்பதாக நான் உணர்கிறேன்.
ஏன் கலைத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகியது?
எனக்கு நடிப்பது மிகவும் பிடிக்கும். அதன் காரணத்தினாலேயே வணிகத்துறையில் ஈடுபட்டு படிப்படியாக நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தேன். என்னுடைய படிப்பு பின்புலம் முற்றிலும் மாறுபட்டவை ஆகும். நான் ஏ லெவலில் சட்டத்துறை செய்ய ஆரம்பித்தேன். ஆனால் நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் மேற்கொண்டு சட்டத்துறையில் படிப்பை தொடரவில்லை.
ஒரு பெண்ணாக கலைத் துறையில் ஈடுபடுவது சுலபமல்ல. அவ்வகையில் எத்தகைய சவால்களை நீங்கள் எதிர் நோக்கியுள்ளீர்கள்?
நிறைய சவால்கள் உள்ளன. அவ்வகையில் பல தேர்வுகளுக்குச் சென்றுள்ளேன். சில தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படுவதோடு நின்றுவிடும். அதற்கு மேல் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் போயிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பெண் என்பதினால் பல தவறான பார்வைகளும் நம்மேல் இருக்கும். அவ்வகையில் சமீபத்தில் இந்திய துறை திரையுலகில் ஏஸ் படத்தின் வழி ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரமாவார். அவர் அங்குள்ளவர்களிடம் கூறியது ஒன்றே ஒன்றுதான். அனைத்து துறைகளிலும் பெண்கள் இம்மாதிரியான சவால்களையும் பேச்சுகளையும் வாங்குவர். அதை எவ்வாறு நாம் எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம். அதற்காக எப்பொழுதுமே நமது ஆசையை விட்டு விடக்கூடாது என்று கூறினார். நானும் எப்பொழுதும் அந்த எண்ணத்தைக் கொண்டிருப்பேன். அவ்வகையில் அந்த அறிவுரை மிகவும் சரியாக இருந்தது எனலாம்.
இந்தியத் திரையுலக வாய்ப்பு உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?
எனக்கு அந்த வாய்ப்பு வீடு புரோடக்ஷன் மூலமே கிடைத்தது. பசங்க 1 செய்து கொண்டிருக்கும் போது மலேசியாவிற்கு விஜய் சேதுபதி வருகை தந்துள்ளார் என்ற விஷயம் வந்தது. அந்த நேரத்தில் சில கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேவை என்று கூறினர். அப்பொழுது நடந்த நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
பசங்க 2 படப்பிடிப்பின் பொழுது என்ன விஷயங்களை கற்றுக் கொண்டீர்கள்??
வீடு புரோடக்ஷன் மற்றும் ஸ்டோரி ஃபிலிம் தயாரிப்பின் கீழ்தான் பசங்க 2 படம்பிடிக்கப்பட்டது. மற்ற புரோடக்ஷன் காட்டிலும் இந்த புரோடக்ஷன் அனைத்து விதத்திலும் சிறப்பானவற்றை தர மட்டுமே எண்ணுவார்கள். அவ்வகையில் சதீஷ் அண்ணன் மற்றும் ஷாலினி படப்பிடிப்பு முழுவதும் எப்பொழுதும் அனைத்து விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும் என்று கருத்தில் கொள்வர். அவ்வகையில் படப்பிடிப்பின் பொழுது வசனங்கள் மாற்றம் இருப்பின் அதனை சிறப்பாகச் செய்து தரக்கூடிய ஆற்றல் சதீஷ் அண்ணனிடம் உள்ளது. என்றுமே சிறந்தவற்றை வழங்க வேண்டும் என்று அவர் யோசித்து செயல்படுவார். அவரின் வழிகாட்டலில் இருந்து வந்தது எனக்கு நிறைய அனுபவத்தை தந்துள்ளது. இனி வேறு ஒரு புரொடபுரோடக்ஷன் கீழ் எந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் எனக்கு சுலபமாக இருக்கும் என நம்புகிறேன்.
அடுத்ததாக எப்பொழுது வெள்ளித்திரையில் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளீர்கள்?
அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வர பல படிநிலைகள் உண்டு. அவ்வாறே எனக்கும் அமைந்திருக்கும் என நம்புகிறேன் தற்போது சின்ன சின்ன வாய்ப்புகளாக இருந்தாலும் நிறைய செய்து கொண்டிருக்கிறேன். பெரிய படைப்புகளை செய்வதற்கு காலம் நிச்சயம் கை கொடுக்கும். அதுவரை கிடைத்ததை சரிவர செய்வேன் என நம்புகிறேன். இதுவரை எனக்கு கிடைத்த அனைத்து கதாபாத்திரங்களும் மாறுபட்டவை ஆகும். அவ்வகையில் அனைத்து கதாபாத்திரங்களும் எனக்கு நல்ல வரவேற்பையே கொடுத்துள்ளன எனலாம்.
சட்டத்துறையில் அனுபவம் உள்ளதால் அண்மையில் நடந்த ஈஷா இணையப் பகடிவதைக்குக் கிடைத்த தீர்வை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
தற்பொழுது அனைத்து இணையதளத்திலும் இணையப் பகடிவதை அதிகம் நிகழ்ந்து வருகிறது. அவ்வகையில் ஈஷா விவகாரத்தில் ஈஷா க்ளாஸ் என்ற சட்ட சீர்திருத்தம் வந்தது வரவேற்கக் கூடியது. இந்தச் சட்ட தீர்த்திருத்தம் இணையப் பகடிவதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன். இதோடு மட்டுமல்லாமல் இந்தச் சீர்திருத்தம் இன்னும் கடுமையாக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
நீங்கள் இணையப் பகடிவதைக்குக் ஆளாகி உள்ளீர்களா?
இணையப் பகடிவதைக்கு நானும் ஆளாகியுள்ளேன். ஆனால், அதனை மிகவும் தைரியமாக எதிர் கொண்டேன் என்றே கூறலாம். ஏனென்றால் பொதுவாகவே நான் தைரியமான பெண்ணாவேன். மனதளவிலும் நான் தைரியமாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே எண்ணுவேன். யாரேனும் என்னை இணையப் பகடிவதைச் செய்தால் பொதுவாகவே நான் கண்டுகொள்ள மாட்டேன். அதனை மனதளவில் ஏற்றுக் கொண்டு வருத்தப்பட மாட்டேன். அதேபோல் என்னைப்போல் மற்றவர்களும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். இணையப் பகடிவதை என்பது இணையத்தில் நடக்க கூடியது மட்டுமே.அதனை நினைத்து வருந்தாமல் வாழ்க்கையில் இன்னும் பல தடைகளும் சவால்களும் உள்ளன. அதனை எவ்வாறு கடக்க வேண்டும் என்பதை நாம் நினைக்க வேண்டும். இணையப் பகடிவதையைச் சமாளிக்க முடியும் என்றால் மட்டும் அதனை எதிர்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அதிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கும் என நான் நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல் இணையப் பகடிவதையைச் செய்பவர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். மலேசியாவில் நம்மினம் சிறுபான்மையினரே. அவர்களே ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கிடைக்கின்ற தளங்களில் ஒருவருக்கொருவர் மனதில் புண்படுத்திக் கொண்டிருந்தால் நம்மிடையே பல பிரச்சினைகளை மட்டுமே உருவாக்கும். அவ்வாறு இல்லாமல் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
தனிப்பட்ட வாழ்க்கையையும் கலைத்துறையையும் எவ்வாறு பக்குவப்படுத்தி கொண்டு செல்கிறீர்கள்?
?
கலைத்துறை வாழ்க்கை என்று பார்த்தால் அதிக பல பிடிப்புகள் மற்றும் வணிகத்துறையை மேம்படுத்துவது என பலவகையில் சென்று கொண்டே இருக்கிறது. தற்பொழுது நிறைய காணொளிகளைச் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. நேர பற்றாக்குறை இருப்பினும் இதனை ஓரளவு சமாளித்துக் கொண்டு வருகிறேன் எனலாம்.
சமூகத் வலைத்தளங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
சமூக வலைத்தளத்தில் நல்ல விஷயங்களும் உள்ளன; தீய விஷயங்களும் உள்ளன. அதில் எது தேவையோ அதை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்நேரமும் சமூக ஊடகங்களை சார்ந்து இருக்கக் கூடாது. முடிந்தவரை சமூக ஊடகங்களில் கிடைக்கக்கூடிய வியாபார வாய்ப்புகள், தொழில் சம்பந்தமான வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் நமது திறமைகள் திறன்களை மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் நல்ல பயனுள்ள தகவல்களையும் செய்திகளையும் நாம் தெரிந்து கொள்ளலாம். சமூக ஊடகம் என்பது ஓர் உணவு போன்றது. அதை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு மீறி நாம் சமூக ஊடகத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் நமக்கு பாதகத்தையே உருவாக்கும் எனலாம் .
பசங்க 2 படத்தில் ரேஷ்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். அது மக்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பை தந்துள்ளது?
மக்கள் மத்தியில் அது மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது எனலாம். நான் எங்கு சென்றாலும் அனைவரும் என்னை ரேஷ்மா என்று கூறி அழைப்பர். அவ்வகையில் அதனை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். மக்கள் என்னையும் என்னுடைய கதாபாத்திரத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று என்னால் உணர முடிகிறது.
தற்போதைய இளைய தலைமுறையினர் சரியான பாதையில் பயணிக்கின்றனர் என்று தாங்கள் எண்ணுகிறீர்களா??
என்னை பொறுத்தவரை இன்றைய தலைமுறையினர் நம்மை விட அறிவார்ந்தவர்களாக இருக்கின்றனர் என்றே கூறலாம். அதே வேளையில், கடின உழைப்பு என்று பார்த்தால் அது அவர்களிடம் குறைவாகவே உள்ளது எனலாம்.
இவ்வேளையில் யாருக்கு நன்றி கூற ஆசைப்படுகிறீர்கள்?
நிச்சயமாக என்னுடைய முதல் நன்றி ஆஸ்ட்ரோ விற்கு. இதற்கு முன்பு மலாய் மொழியில் பல படிப்புகளைச் செய்துள்ளேன். பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது ஆஸ்ட்ரோ தான். அதன் பிறகு, வீடு புரோடக்ஷனில் டென்னிஸ் அண்ணன் மற்றும் விமலா ஆகியோருக்கு நன்றி. ஃப்லிம் ஸ்டோரியில் சதீஷ் மற்றும் ஷாலினி ஆகியோருக்கும் எனது நன்றி. அனைவர் மத்தியிலும் பிரேசிலா என்ற நடிகை தெரிய வருகிறது என்றால் அதற்கு முழு காரணம் இவர்களே. ஆதலால் அவர்களுக்கு எனது முதன்மை நன்றியை நான் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *