பாலஸ்தீன விவகாரத்தில் போப் பிரான்சிஸ் போல் அரபு தலைவர்கள் தைரியமாக இருக்க வேண்டும்!

- Muthu Kumar
- 25 Apr, 2025
புத்ராஜெயா, ஏப். 25-
பாலஸ்தீன மக்களுக்காக பேசுவதில் மறைந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் வெளிப்படுத்திய துணிச்சலை, அரபுத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று, அமானா கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை காலமான போப்பாண்டவர் பிரான்சிஸ் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருந்த வேளையில், அரபு நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து மௌனமாக இருந்து வருவதாகவும் பாலஸ்தீனர்களை ஒடுக்குபவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்றனர் என்றும், ஒரு முகநூல் பதிவில் நேற்று வியாழக்கிழமை முஹமட் குறிப்பிட்டார்.
அதோடு, காஸாவில் இஸ்ரேலியர்களினால் பாலஸ்தீனர்கள் வேண்டுமென்றே இனப்படுகொலை செய்யப்படுவதை போப்பாண்டவர் பிரான்சிஸ் கண்டித்ததுடன் அமைதியை விரும்பியதை முஹமட் பாராட்டினார்.மனிதாபிமானத்தைக் காட்டிலும் அரசியல் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இதர உலகத் தலைவர்களோடு ஒப்பிடும்போது, போப்பாண்டவர் பிரான்சிஸின் நிலைப்பாடு மாறுபட்டிருந்தது என்று முஹமட் தெரிவித்தார்.
"மனிதநேய உணர்வை இழந்த அரசாங்கங்களுக்கு, மதத் தலைவர்கள் தலையாட்டி பொம்மைகளாக மாறக்கூடாது' என்று, கோலாலம்பூரில் உள்ள செய்ன்ட் ஜான் தேவாலயத்தில் சந்தித்தபோது, எஃப்எம்டியிடம் முஹமட் தெரிவித்தார். பாலஸ்தீன ஆதரவு குழுவின் செயலக உறுப்பினர்கள் தலைமையிலான ஒரு குழுவில் இடம் பெற்றிருக்கும் முஹமட், போப்பாண்டவர் பிரான்சிஸுக்கு நேற்றுஅங்கு அஞ்சலி செலுத்தினர்.
அமைதிக்கான பெரும்பாலான உலகத் தலைவர்களின் கோரிக்கைகள் வெறும் உதட்டளவில்தான் இருப்பதாகவும் அவர்கள் அரசியல் மேலாதிக்கம் மீதுதான் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
"ஆனால், இனப்படுகொலையை சாடியிருந்ததோடு, அமைதிக்கான போப்பாண்டவர் பிரான்சிஸின் கோரிக்கைகள் ஒரு தூய இதயத்திலிருந்து வந்தவை. அமைதியும் மனிதநேயமும் மதத்தையும் கடந்த பண்புகள் என்பதை நமக்குக் காட்டுகிறது. இதற்காக அவரை நான் மிகவும் மதிக்கின்றேன்" என்று, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சருமான் முஹமட் குறிப்பிட்டார்.
பணிவும் நீதி உணர்வும் ஆழமாக ஒன்றிணைந்த போப்பாண்டவர் பிரான்சிஸின் மரணம், கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பெரும் இழப்பாகும் என்றும் முஹமட் தெரிவித்தார்.
Ketua Amanah, Mohamad Sabu memuji keberanian mendiang Pope Francis menyuarakan sokongan terhadap rakyat Palestin. Beliau mengkritik sikap berdiam diri pemimpin Arab. Pope Francis dikatakan berbeza kerana keutamaannya pada keamanan dan kemanusiaan, tidak seperti pemimpin dunia lain yang lebih mementingkan kuasa politik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *