டாக்டர் அம்பேத்கரின் லட்சியக் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்!டாக்டர் சுவராஜ் யங்டே உடன் ஒரு நேர்காணல்.

- Muthu Kumar
- 19 Dec, 2024
(கு.தேவேந்திரன்)
கோலாலம்பூர், டிச. 19-
உலகம் முழுவதும் தலித் மக்களின் போராட்டங்களை எடுத்துரைப்பதோடு, அண்ணல் அம்பேத்கரின் லட்சியங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். அந்த நோக்கத்தோடு தான் உலக நாடுகளுக்குச் செல்லும் என் பயணமும் தொடரும் என்று மலேசியாவுக்கு குறுகியகால வருகை மேற்கொண்டுள்ள டாக்டர் சுவராஜ் யங்டே கூறினார்.
நேற்று தமிழ் மலர் அலுவலகத்திற்கு வருகைதந்த அவர் மரியாதை நிமித்தமாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜனை சந்தித்தார். டாக்டர் சுவராஜுடன், மலேசிய அம்பேத்கர் இயக்கத்தின் தலைவர் டத்தோ கே.பஞ்சமூர்த்தி, தமிழ் மலர் இயக்குநர் டத்தோ எஸ்.எம்.பெரியசாமி, ஔவை க.முருகன், ஓம்ஸ் அறவாரியத் துணைத் தலைவர் திலகன், பொன்ரங்கன், சி.இளஞ்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ் மலருடனான சந்திப்பின்போது டாக்டர் சுவராஜ் மேலும் கூறுகையில், தற்போது நான் உலகின் பிரசித்தி பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு கல்வி ஆய்வாளராகப் பணியாற்றி வருகின்றேன் என்றார் அவர்.இந்த கல்வி ஆய்வோடு தலித் மக்களின் உணர்வுகளை வெளியுலகுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தார்மீகக் கடப்பாட்டையும் நான் கொண்டுள்ளேன்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். அம்மாநில அரசாங்கத்தின் முழு உபகாரச் சம்பளம் பெற்று முனைவர் படிப்பை மேற்கொண்டேன்.அதன் பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முனைவர் பட்டம் பெற்றேன். ஒரு தலித் சமூகத்தில் இருந்து வந்த நான், என்னாலும் கல்வி கற்று முன்னேற முடியும் என்பதற்கு நான் ஓர் உதாரணம்.
என்னைப்போன்றே தலித் மக்களும் அந்த உயரத்தை அடையவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் டாக்டர் அம்பேத்கரின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் கருதுகிறேன்.உலகெங்கும் வாழ்கின்ற
தலித் மக்களின் எண்ண அலைகளை பிரதிபலிக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். எந்த ஓர் ஏற்றத்தாழ்வும் இல்லாத சமுதாயமாக அனைவரும் இருக்க வேண்டும் என்பதுதான் டாக்டர் அம்பேத்கரின் கொள்கையாகும்.
இந்தியாவின் பொருளாதார பலம் மிக்க மாநிலமாகத் திகழும் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த நான். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல.டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களை தலித் மக்களுக்கு மட்டும் உரியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து இனத்தவர்களாலும் மதத்தவர்களாலும் கொண்டாடப்பட வேண்டிய கருத்துகள்தான் டாக்டர் அம்பேத்கரின் கருத்துகளாகும்.
இன்று மலேசியா பல்வேறு இனங்களைக் கொண்ட நாடாகத் திகழ்ந்து வருகிறது. ஒற்றுமை உணர்வும் சகோதரத்துவ மனப்பான்மையுடனும் நாட்டின் இறையாண்மைக் கொள்கையுடனும் சிறந்து விளங்குவது பாராட்டுக்குரியதாகும். இங்கு மலாய், சீனர், இந்தியர்கள் என்று பாகுபாடில்லாமல் பழகி வருவதும் உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமாகும் என்று டாக்டர் சுவராஜ் யங்டே கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *