கலைக்கப்பட வேண்டியது அம்னோ அல்ல மசீசதான் தன்னை கலைத்துவிட்டு ஜசெகவில் சேர்ந்துவிட வேண்டும்!

- Muthu Kumar
- 05 May, 2025
கோலாலம்பூர், மே 5-
கலைக்கப்பட வேண்டியது அம்னோ அல்ல. மாறாக, தன்னிடம் இருக்கும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் அம்னோவிடமே ஒப்படைத்து விட்டு, மசீச ஜசெகவில் சேர்ந்துவிட வேண்டும் என்று, கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஷிமின் தெரிவித்துள்ளார்.
“இன்றைய நிலையில், மசீச இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே கொண்டிருக்கிறது. அவ்விரு தொகுதிகளும் மலாய்க்கார வாக்காளர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இடங்களில் இருக்கின்றன.இதில் உண்மை என்னவென்றால், அம்னோ ஆதரவாளர்களின் வாக்குகளினால் மட்டுமே அவ்விரு தொகுதிகளிலும் மசீச வெற்றி பெற்றிருக்கிறது.
"மசீச இன்னமும் சீன சமூகத்தை பிரதிநிதிக்கவில்லை. ஆதலால், அக்கட்சி தனது இரண்டு தொகுதிகளையும் அம்னோவிடமே திருப்பித் தந்துவிட்டு கட்சியையும் கலைத்துவிட்டு ஜசெகவில் சேர்ந்து விடும் நடவடிக்கையை தைரியமாக மேற்கொள்ள வேண்டும்" என்று, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சோங் ஷிமின் கூறியுள்ளார்.
பெர்சத்து தலைவர்கள் தங்கள் கட்சியைக் கலைத்து விட்டு அம்னோவிற்கே மீண்டும் திரும்ப வேண்டும் என்று. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கிளப் செயலாளர் முஸ்தப்பா யாக்கோப் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்ததற்கு எதிராக பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஒரே மாதிரியான சித்தாந்தங்களைக் கொண்டிருப்பதன் காரணத்தினால், அம்னோவுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்ற தமது கட்சி தயாராக இருப்பதாக,பெர்சத்து துணைத் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் அண்மையில் நடந்த ஒரு போட்காஸ்ட் நேர்காணலில் கூறியிருந்தார்.குறைவான எண்ணிக்கையில் வாக்காளர் வாக்களிக்க வந்திருந்த போதிலும், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் கூடுதலான பெரும்பான்மையில் அம்னோ வெற்றி பெற்றிருந்த சமயத்தில், ஹம்சா இத்தகைய ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
எனினும், இந்த விவகாரம் மீதான கவனத்தை ஜசெகவைச் சேர்ந்த சோங், மசீச பக்கம் திருப்பி விட்டிருக்கிறார். மசீச இனியும் ஒரு பொருத்தமான கட்சி அல்ல என்றும் கூறிய அவர், அரசாங்கத்தில் குரல் கொடுப்பதிலும் அது தோல்வி கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் நிலவும் நிறை குறைகளை வெளிப்படுத்துவதில் பங்காற்றுவதிலும் தோல்வி கண்டிருக்கும் மசீச, தீவிரவாத அறிக்கைகளை எதிர்கொள்ளும்போது அவ்வப்போது அமைதியாகவே இருந்து வருவதாகவும் சோங் கூறினார்.
Ahli Parlimen Kampar, Chong Zhemin mencadangkan MCA bubar dan serahkan dua kerusinya kepada UMNO, kemudian sertai DAP. Beliau mendakwa MCA gagal mewakili masyarakat Cina dan hanya menang hasil undi penyokong UMNO di kawasan majoriti Melayu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *