கோழிப் பண்ணையால் ஈக்களின் தொல்லை- குடியிருப்பாளர்கள் வேதனை!

top-news
FREE WEBSITE AD

(தி.ஆர்.மேத்தியூஸ்)

செபராங் பிறை, ஏப். 24-

தென் செபராங் பிறை, சிம்பாங் அம்பாட் பகுதியில் அமைந்துள்ள தாமான் பெர்டானா குடியிருப்பு பகுதியில் நிலவி வரும் ஈக்கள் தொல்லையால்,பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த குடியிருப்புக்கு அருகில் இரண்டு கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருவதால்,அதிலிருந்து வெளியேறும் ஈக்களால், கடந்த ஓராண்டாக அவதியுற்று வருவதாக தெரிவித்த குடியிருப்பாளர்கள், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வீட்டிற்கான சாவிகளைப் பெற்று, புதிய வீட்டில் குடியேறியதிலிருந்து இன்று வரையில், அன்றாட வாழ்க்கை நிலை,சுகாதாரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
தினமும் உணவுகளை தயாரிக்கும் பொழுதும், உட்கார்ந்து சாப்பிடும் போதும், எங்களுக்கு முன்னர் ஈக்கள் வந்து குவிந்து விடுவதால் நிம்மதியாக சாப்பிடவும் முடியவில்லையென. குடியிருப்பாளர்களில் ஒருவரான என்.விஜய் (வயது 31) தெரிவித்தார்.

இந்த குடியிருப்புப் பகுதியின் லோரோங் 24 மற்றும் லோரோங் 26 ஆகியவற்றின் அருகில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் அந்த கோழிப் பண்ணைகள் அமைந்திருப்பதால், எங்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களும் இப்பிரச்சினையால் அவதியுறுவார்கள் எனவும் நம்பப்படுகிறது.

விலையுயர்ந்த வீட்டை வாங்கியும், இந்த ஈக்கள் தொல்லையால் நிம்மதியாக இருக்க முடியாத நிலையில் வாங்கிய வீட்டை விற்று விடலாமா என்று கூட சில நேரங்களில் சிந்தித்துள்ளதாகவும் கூறிய அவர், இன்னும் இங்கு குடியேறாதவர்கள் வீட்டை விற்று விடலாமா அல்லது குடியேறலாமா என்று யோசித்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

பினாங்கு மாநில சுகாதார இலாகா இந்த கோழிப் பண்ணை உரிமையாளருக்கு இருமுறை அபராதம் விதிக்கப்பட்டும், இந்த பிரச்சனை தொடர்ந்து வருவதாக சொன்னார். இந்த கோழிப் பண்ணை செயல்படுவதற்கு நாங்கள் எந்தவகை எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனவும், எந்தவித தொல்லையும் இல்லாமல் முறையான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே இங்கு வசித்து வரும் 120 குடும்பங்களின் சார்பில் கோரிக்கையை முன்வைத்த என்.விஜய் சொன்னார்.

மேலும் கடந்தாண்டு லோட் 864 இல் அமைந்துள்ள பண்ணைக்கு 15,000 வெள்ளியும், லோட் 3588 இல் அமைந்துள்ள பண்ணைக்கு 7.500 வெள்ளியுமாக அமலாக்க அதிகாரிகளால் விதிக்கப்பட்ட அபராதத்தை பண்ணை உரிமையாளர் செலுத்தினார் என்றார்.ஆகையால் இப்பிரச்சினைக்கு பினாங்கு மாநில அரசாங்கமும், சம்பந்தப்பட்ட அமலாக்க இலாகாக்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்பாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Penduduk Taman Perdana, Simpang empat mengadu gangguan lalat akibat dua ladang ayam berdekatan. Gangguan ini menjejaskan keselesaan dan kesihatan harian mereka. Walaupun ladang telah didenda, masalah berlarutan. Penduduk merayu tindakan segera pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *