ஹாங்காங்கில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை!

- Muthu Kumar
- 09 Apr, 2025
ரவாங், ஏப். 9-
ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக இளம் புத்தாக்கக் கண்டுபிடிப்புப் போட்டியில், மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட ஒரே தமிழ்ப்பள்ளியான, ரவாங் தமிழ்ப்பள்ளி தனது பெயரை நிலைநாட்டியுள்ளது.அப்பள்ளியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்களான சஞ்சனா ஜெகதீஸ்வரனும் லக்ஷன் சண்முகநாதனும் தங்களின் கண்டுபிடிப்பிற்காக தங்கப் பதக்கம். ஹாங்காங் சிறப்பு விருதுடன், 800 ஹாங்காங் டாலர் ரொக்கத்தையும் வென்றுள்ளனர்.
பல சவால்களைக் கடந்து, இரண்டில் ஒன்று எனப்படும் இரண்டு தன்மைகள் கொண்ட ஒரே தயாரிப்பான இலை உரம் மற்றும் பூச்சி விரட்டி மருந்தே தாங்கள் உருவாக்கியவை என்று அவர்கள் கூறினர்.மேலும், இக்கண்டுபிடிப்பின் மூலகாரணம் குறித்தும் அம்மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
"என் வீட்டுத் தோட்டத்தில் பூச்சித் தொல்லை அதிகமாக உள்ளது. அதனால் என் தாத்தா ஒவ்வொரு நாளும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கினார். அவர் படும் துன்பங்களைப் பார்த்தபோது தான் அத்தகைய கண்டுபிடிப்பையே உருவாக்க வேண்டும் எனும் முயற்சியில் களமிறங்கினேன்," என்று தங்கம் வென்ற மாணவர் லக்ஷன் தெரிவித்தார்.
பல நாடுகளில் இருந்து இப்போட்டியில் கலந்து கொண்டாலும் தங்களின் கண்டுபிடிப்பே நீதிபதியையும் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறிய அவர்கள், இது தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்றும் பெருமை கொண்டனர்.
"பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் எங்களின் இந்த கண்டுபிடிப்பு பலரையும் கவர்ந்தது. இன்று இயற்கை சூழலுக்கு இது மிகவும் தேவையான கண்டுபிடிப்பு என்று பலரும் எங்களைப் பாராட்டினர். இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொண்டதன் மூலம் மற்ற நாட்டு மாணவர்களின் நட்பும் எனக்கு கிடைத்தது." என்று தங்கம் வென்ற மாணவி சஞ்சனா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
இதனிடையே, அடுத்தகட்ட இலக்கு குறித்து மாணவர்களின் பயிற்சியாளரும் இளம் அறிவியலாளர் அமைப்பின் தோற்றுநருமான சண்முகநாதன் பகிர்ந்து கொண்டார்."இனி இந்த மாணவர்களின் உருவாக்கத்தை எவ்வாறு சந்தைப்படுத்துவது அதற்கு எத்தகைய முறைகளைக் கையாளுவது. யாரை அணுகுவது போன்ற பல வழிகள் அவர்களுக்கு கற்றுத் தரப்படும். ஏனெனில் பரிசு பெற்ற படைப்புகள் அத்துடன் நின்றுவிட்டால் அதற்கு மதிப்பு இருக்காது," என்று பயிற்றுநர் சண்முகநாதன் தெரிவித்தார்.
மாறாக இந்த வயதிலே, வர்த்தகத்தின் உத்திகள் குறித்து அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் மட்டுமே ஒரு நோக்கத்துடன் மாணவர்கள் தங்களின் அடுத்தகட்ட நகர்வை முறையாகத் திட்டமிடுவர் என்று சண்முகநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.
Dua murid Tahun 4 dari SJKT Rawang, Sanchana dan Laxan, menang emas dan anugerah khas di pertandingan inovasi di Hong Kong. Mereka cipta baja daun yang juga penghalau serangga. Ciptaan itu diinspirasikan oleh masalah serangga di kebun datuk Laxan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *