கோவிட்-19 தடுப்பூசியினால் எதிர்மறை விளைவுகள் - அரசாங்கம், இதர 24 தரப்புகள் மீது தொடரப்பட்ட வழக்கு மீட்கப்பட்டது!

- Muthu Kumar
- 11 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 11-
கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உடல்நலப் பாதிப்புகளும் மரணமும் ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் இதர23 தரப்பினருக்கு எதிராக மலேசியர்கள் சிலர் கூட்டாகத் தொடுத்திருந்த ஆறு கோடி வெள்ளி இழப்பீட்டு வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளுக்குச் செலவுத்தொகையாக எட்டாயிரம் வெள்ளியை வழங்கும்படி வாதிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா அமாட் மொஸானுடின் ஷா ராஜா மோஸான் நேற்று உத்தரவிட்டார். ஆயினும், அவ்வழக்கை மறுதாக்கல் செய்ய வாதிகளுக்கு அவர் அனுமதியளித்தார்.
வழக்கை மறுதாக்கல் செய்வதற்கு முன் தங்களின் சட்ட வியூகத்தை மதிப்பீடு செய்வதற்காக அவ்வழக்கை மீட்டுக் கொள்ள முடிவுசெய்துள்ளோம் என்று வாதிகளின் வழக்கறிஞர் ஸைனுடின் அபு பக்கார் தெரிவித்தார்.இந்த வழக்கில் அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் முக்கியமானவை என்பதால் வழக்கை மறுதாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கும்படி முந்தைய வழக்கு மேலாண்மையின்போது வாதிகளிடம் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
இதுபோன்ற கூட்டு வழக்குத் தொடரும்போது உங்களின் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். அத்துடன், அவை அறிவியல் ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த வழக்கைக் கையாளும்போது குறிப்பிட்ட சில விவரங்களை நீங்கள் தெளிவுற அறிந்திருக்க வேண்டும். இந்த வழக்கு விஸ்தாரமானது என்பதே இதற்குக் காரணமாகும். ஆகவே, வழக்கை நீங்கள் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராஜா அமாட் அப்போது வலியுறுத்தியிருந்தார்.
உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் கெப்ரிசஸ், முன்னாள் பிரதமர்களான முஹிடின் யாசின், இஸ்மாயில் சப்ரி, சுகாதார அமைச்சர் ஸூல்கிப்ளி அமாட், உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன், கல்வியமைச்சர் ஃபாட்லினா சிடேக் உட்பட பலர் அவ்வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
நான்காண்டுகளுக்கு முன்பு கோவிட்-19 பெருந்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது தடுப்பூசி செலுத்துவதை அரசாங்கம் கட்டாயமாக்கியதால் தாங்கள் உடல்நலம் பாதிக்க வேண்டி வந்ததாக வாதிகள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.இன்னும் பிறவற்றோடு, கோவிட்-19 கிருமிகள் என்பது ஒரு போலியான கூற்று என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
Sebahagian rakyat Malaysia menarik balik saman RM60 juta terhadap PM Anwar, WHO dan 23 pihak lain atas dakwaan kesan sampingan vaksin Covid-19. Mahkamah mengarahkan mereka membayar RM8,000 kos guaman tetapi membenarkan saman difailkan semula dengan bukti saintifik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *