புத்ரா ஹைட்ஸ் பேரிடர்: 190 குடும்பத்தினர் குடியேறி இருக்கின்றனர்!

- Muthu Kumar
- 11 Apr, 2025
ல்சுபாங் ஜெயா, ஏப். 11-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் சேதமுற்ற 190 வீடுகள் வசிப்பதற்குப் பாதுகாப்பானவை என்று அதிகாரத்தரப்பினர் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அவ்வீடுகளின் உரிமையாளர்கள் அவற்றில் மீண்டும் குடிபுகுந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள 487 வீடுகளில், நேற்று வரையில் 12 தொழில்நுட்ப நிறுவனங்கள் பரிசோதனைகளை செய்திருப்பதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் உசேன் ஒமார் கான் தெரிவித்தார்.அந்த 12 நிறுவனங்களில் தெனாகா நேஷனல் பெர்ஹாட், ஆயர் சிலாங்கூர் பெர்ஹாட் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தொழில் இலாகா, பொதுப்பணி இலாகா, சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் மற்றும் தமது தரப்பும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
"பரிசோதிக்கப்பட்ட வீடுகளில் 328 வீடுகள் வசிப்பதற்கு பாதுகாப்பானவை, 190 வீடுகளில் அதன் உரிமையாளர்கள் குடிபுகுந்தும் விட்டனர்" என்று பெர்னாமா நேற்று வியாழக்கிழமை தொடர்பு கொண்டபோது உசேன் தெரிவித்தார்.
அதோடு, நோன்புப் பெருநாளின் இரண்டாவது நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 8 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் சேதமடைந்த 306 வீடுகளில் டிஎன்பியினால் மீண்டும் மின்சார விநியோகம் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, புத்ரா ஹைட்ஸ் பகுதியில் போலீசார் இன்னமும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது அங்கு பெர்னாமா நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அப்பகுதியில் வசிப்போரும் சிறப்பு நுழைவு அட்டைகளைக் கொண்டிருப்போரும் மட்டுமே அப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் நிலத்தை சமநிலைப்படுத்தும் பணி 30 விழுக்காடு பூர்த்தியாகி இருப்பதாக, உசேன் முன்னதாகக் கூறியிருந்தார். அந்த எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவத்தின்போது, 30 மீட்டர் உயரத்துக்கு மேல் 1,000 செல்சியஸ் வரையிலான உஷ்ணத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அதை முழுமையாக அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு எட்டு மணி நேரம் தேவைப்பட்டது.
Putra Heights gas meletup menyebabkan 487 rumah terjejas. 328 rumah disahkan selamat, 190 telah didiami semula. Pihak berkuasa masih kawal ketat kawasan. Pemulihan tanah 30% siap, bekalan elektrik dipulihkan di 306 rumah oleh TNB.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *