கூச்சிங்கில் 18 வயது இளைஞர் கொலை! வீட்டுத் தோழருடன் ஏற்பட்ட சண்டையில் பரிதாபம்
- Shan Siva
- 13 Feb, 2026
கூச்சிங், பிப் 13: கூச்சிங், லுண்டுவில் வாடகை வீட்டில் வசித்து வந்த 18 வயது இளைஞர் ஒருவர், வீட்டுத் தோழருடன் ஏற்பட்ட சண்டையின்போது கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று காலை 7.12 மணியளவில் சரவாக் பொது மருத்துவமனை (HUS) மருத்துவ அதிகாரியிடமிருந்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக லுண்டு போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்ட் சுதிர்மான் கிராம் தெரிவித்தார்.
18 வயதுடைய பாதிக்கப்பட்டவர் உணர்விழந்த நிலையில், துடிப்பு இல்லாமல் HUS-க்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆரம்ப பரிசோதனையில் அவரது கண் மற்றும் இடது கன்னத்தில் வீக்கம் இருந்ததுடன், மூக்குப் பகுதியில் உலர்ந்த இரத்தக் கறைகள் காணப்பட்டன என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்கு முன், பாதிக்கப்பட்டவரும் அவரது சில வேலைத்தோழர்களும் கலந்து கொண்ட சமூகச் சந்திப்பில் மது அருந்தியிருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது வேலைத்தோழரும் வீட்டுத் தோழருமான ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது உடல் மோதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
சண்டையின் போது பாதிக்கப்பட்டவர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சந்தேக நபர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் என்று சுதிர்மான் கூறினார்.
இந்த வழக்கில் உதவிக்காக 29 முதல் 33 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவரின் வேலைத்தோழர்கள் ஆவர். மேலும், ஒரு நான்கு சக்கர வாகனமும், பல கைப்பேசிகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின்னர் தப்பியோடியதாக நம்பப்படும் இன்னொரு சந்தேக நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் விசாரணை செய்யப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



