திரிசூலத்தை மிதித்தவனை ஏன் கைது செய்யவில்லை! கோபத்தை அதிகரிக்காதீர்! ராயர் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலால்ம்பூர், ஏப் 23: புனிதமான இந்து சின்னத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மே 17 அன்று குற்றம் சாட்டப்படவுள்ள சர்ச்சைக்குரிய  செயற்பாட்டாளர் தமீம் தாஹ்ரி அப்துல் ரசாக்கைக் கண்டுபிடித்து கைது செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து டிஏபி ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் என் ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவூதி அரேபியாவில் இருப்பதாகக் கூறப்படும் தமீமைத் திரும்பப் பெறுவதற்கு, உள்துறை அமைச்சகம் சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தமீமைக் கைது செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, காவல்துறை தலைமை ஆய்வாளரும் உள்துறை அமைச்சரும் இன்றுவரை ஏன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை? என்று வழக்கறிஞராகவும் இருக்கும் ராயர் ஒரு அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.

நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அல்லது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன போன்ற தெளிவற்ற பதில்களை அதிகாரிகள் கொடுக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

குறிப்பாக இனம் அல்லது மதம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, ​​தாமதங்கள் யூகங்களைத் தூண்டும் என்றும், தெளிவின்மை கோபத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் அதிகாரிகளை எச்சரித்தார்.

இதன் காரணமாக, இந்த வழக்கின் நிலை குறித்து ஐஜிபி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் தெளிவான மற்றும் உறுதியான விளக்கங்களை அளிக்க முன்வர வேண்டும் என்று தாம் கோருவதாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் புனிதப் பொருளை அவமதித்த குற்றத்திற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-இன் கீழ், தமீம் மீது மார்ச் 17 அன்று லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்தது.

இருப்பினும், அந்த நபர்  பாங்காக்கிலிருந்து ரியாத்திற்குப் பயணம் செய்த பிறகு,  சவுதி அரேபியாவில் இருப்பதாகக் கூறி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு ஏதுவாகக் குறைந்தது இரண்டு மாதங்களாவது அவகாசம் கோரி அரசுத் தரப்பு வழக்குத் தொடர்ந்தது.

இந்துக்களின் புனிதப் பொருளான திரிசூலத்தை அவர் அவமதிப்பதாகக் கூறப்படும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, தமீம் மீது சுமார் 192 காவல் துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சட்டவிரோதமானதாகக் கூறப்படும் இந்து கோயில்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த தமீம், தான் ஒரு திரிசூலத்தை அவமதித்தது தனக்குத் தெரியாது என்றும், அதை ஒரு துருப்பிடித்த உலோகத் துண்டு என்று தவறாக நினைத்துவிட்டதாகவும் கூறினார்.

தமீம் மீது குற்றம் சாட்டப்படவிருந்த அதே நாளில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுயாதீன மத போதகர் சம்ரி வினோத் மற்றும் செயற்பாட்டாளர் அருண் துரைசாமி  ஆகியோர் மீது தனித்தனி நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *