ஒற்றுமை அரசு இனி தேவையில்லை! நாம் இல்லாமல் ஆட்சி செய்யட்டும்! பாஸுடன் கைகோர்ப்போம்! - அக்மால் சல்லே ஆவேசம்
- Shan Siva
- 04 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 4: அம்னோ இளைஞர் அணித் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மல் சல்லே, ஒற்றுமை அரசிலிருந்து அம்னோவிலகி, பாஸ் (PAS) கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அம்னோ இளைஞர் அணியின் சிறப்பு மாநாட்டில் பேசிய அவர், தற்போதைய அரசில் அம்னோ வகிக்கும் பங்கு,மலாய் உரிமைகள் மற்றும் இஸ்லாம் தொடர்பான “சிவப்பு கோடுகளை” (red lines) கடக்கும்படி கட்சியை கட்டாயப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.
மலாய் மக்கள் மத்தியில் உள்ள உட்கட்சி மற்றும் உள் பிரிவுகள், சமுதாயத்தை பலவீனப்படுத்தி, பிறருக்கு சாதகமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். இதனால், மலாய் ஒற்றுமை இப்போது அவசியமாகியுள்ளது என்றும் வலியுறுத்தினார்.
இந்த ஒற்றுமையை நாட்டின் இரண்டு பெரிய மலாய் அடிப்படையிலான கட்சிகளான அம்னோ மற்றும் பாஸ் தான் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அம்னோவும் பாஸும் முதன்மை இயக்க சக்திகளாக இருக்க வேண்டும்.அம்னோவும் பாஸும் ஒன்றிணைந்தால், கடவுள் கிருபையால் மலாய் சமுதாயம் மீண்டும் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.
மத்திய அரசில் அம்னோவிற்கு என்ன மதிப்பு? என்ற கேள்வியையும் அக்மால் எழுப்பினார். அம்னோவின் 26 நாடாளுமன்ற இடங்கள் இல்லாமல்கூட, தற்போதைய கூட்டணி நாடாளுமன்ற பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
அம்னோ இனி மதிக்கப்படவில்லை என்றால், நாம் இல்லாமல் அவர்கள் ஆட்சி செய்யட்டும். அம்னோ வெறும் எண்ணிக்கையை நிரப்பும் கட்சி அல்ல என அவர் கூறினார்.
மீண்டும் எதிர்க்கட்சியாக மாற வேண்டிய நிலை குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர்,2018 பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் அம்னோ உயிர்ப்புடன் இருந்தது என்றும், தஞ்சோங் பியாய் உள்ளிட்ட பல இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றதாகவும் அவர் நினைவூட்டினார்.
அதிகாரத்தை இழந்தபோது அம்னோ வீழ்ச்சி அடையவில்லை. மரியாதையின்றி தலை குனிந்தால் மட்டுமே அம்னோ வீழ்ச்சியடையும் என்றார்.
மேலும், மலாய் ஒற்றுமை குறித்த தனது அழைப்புகள் இனவாதமானவை அல்ல என்றும், அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதே அதன் அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



