நாடு முழுதும் மாணவர்களுக்கு ஒரே சீருடைகளா? - கல்வி அமைச்சு விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 3: நாடு முழுவதும் பள்ளி சீருடைகளை ஒரே மாதிரியாக்கும் (Standardisation) முன்மொழிவு தற்போது ஆய்வு நிலையில் உள்ளதாகவும், இது 2026 கல்வியாண்டில் அமல்படுத்தப்படாது என்றும் கல்வி அமைச்சு நேற்று தெளிவுபடுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் மொஹ்த் அஸாம் அகமது கூறுகையில், இதுகுறித்து இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரம் ஆய்வு கட்டத்திலேயே உள்ளதாகவும் தெரிவித்தார்.

“நாடு முழுவதும் பள்ளி சீருடைகளை ஒரே மாதிரியாக்கும் முன்மொழிவு தற்போது ஆய்வில் உள்ளது என்பதை கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது,” என அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், அனைத்து தொடர்புடைய அம்சங்களையும் முழுமையாக மதிப்பீடு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், ஒப்புதல் அளிக்கப்பட்டால் அது 2027 கல்வியாண்டில் அமல்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

“2027 கல்வியாண்டில் அமல்படுத்தும் சாத்தியம் குறித்து அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்,” என அவர் விளக்கினார்.

இதற்கிடையில், தற்போதைய கல்வியாண்டில் மாணவர்களின் பள்ளி சீருடைகளில் எந்த மாற்றமும் இல்லை என பெற்றோர்களுக்கும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அவர் உறுதியளித்தார்.

“இந்த ஆண்டிற்கான மாணவர்களின் பள்ளி சீருடைகளில் எந்த மாற்றமும் இல்லை. பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை,” என்றும் அவர் கூறினார்.

எந்தவொரு முடிவும் எடுக்கப்பட்டால், அது பெற்றோர்களுக்கும், அனைத்து தொடர்புடைய தரப்பினருக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.

இந்த முன்மொழிவின் நோக்கம் குறித்து விளக்கமளித்த மொஹ்த் அஸாம், பள்ளி மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்த்திடுவதுடன், பள்ளி தயாரிப்புகளுக்காக பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை குறைப்பதற்கும் இது உதவக்கூடும் என்றார்.

“இந்த ஒரே மாதிரியான சீருடை முன்மொழிவு, மாணவர்களிடையே ஒரே அடையாள உணர்வை உருவாக்குவதோடு, பெற்றோர்கள் சுமக்கும் செலவுகளை குறைக்கவும் உதவலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

புதிய கல்வியாண்டை முன்னிட்டு பள்ளி சீருடைகளில் மாற்றம் ஏற்படலாம் என்ற பொது விவாதங்கள் மற்றும் ஊகங்கள் நிலவி வந்த நிலையில், கல்வி அமைச்சு  இந்த விளக்கத்தை வழங்கியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *