எனக்கு பயமாக இருக்கிறது! - ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 02 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 2:நாட்டின் அரசியல் களத்தில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால், அம்னோ தன் பழைய வசதிக் கோட்டையை விட்டு வெளியே வந்து, புதிய சிந்தனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அம்னோ கடந்த கால நினைவுகளில் மட்டும் சிக்கிக் கொண்ட கட்சியாக பார்க்கப்படக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக முழுமையான மறுமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதில் அரசியல் விளம்பரஉத்திகளும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்த மாற்றம் அம்னோவுக்கு மட்டும் அல்லாமல், பாரிசான் நேஷனல் கூட்டணிக் கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும் என்றார்.
நாம் 20 ஆண்டுகளுக்குப் பிறகான திசையை மட்டும் யோசிக்கக் கூடாது. இன்னும் சுமார் 22 மாதங்களில் பொதுத் தேர்தல் எதிர்நோக்கி இருக்கிறோம். அதனால் இப்போதே நல்ல தயாரிப்பாக, தரமான முத்திரையாக, திறம்பட விளம்பரம் செய்யத் தெரிந்த கட்சியாக மாறவேண்டும் என்று ஜாஹிட் கூறினார்.
2018 மற்றும் 2022 பொதுத் தேர்தல்களில் நடந்ததைப் போலவே மக்கள் மீண்டும் முடிவு எடுத்தால் — அதுவே நமது வீழ்ச்சி காலம் — அம்னோ 100 ஆண்டுகள் நிறைவு எட்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை மூட வேண்டிய நிலை கூட வரலாம் என்ற பயம் தனக்கு இருகிறது என்று ஜாஹிட் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற அம்னோ அரசியல் பள்ளியின் முதல் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையின் போது இதனைத் தெரிவித்தார்.
அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலை வலுப்படுத்த, கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள எதிர்மறை கதைகளையும் பார்வைகளையும் முறையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜாஹிட் வலியுறுத்தினார்.
நமது தயாரிப்பு நல்லதாகவே இருந்தாலும், மக்களிடையே உள்ள எதிர்மறை பார்வை மாறாவிட்டால் அம்னோ முன்னேற முடியாது. இந்தப் பார்வை ஒரு கூட்டு கனவுக் கொடுமை. அதை சரியான முறையில் உடைத்தே ஆக வேண்டும் என்று ஜாஹிட் கூறினார்.
அம்னோஅரசியல் பள்ளியில் பட்டம் பெற்றவர்கள், எதிர்கால அம்னோ தலைவர்கள் மட்டுமல்லாது, கட்சியின் இளம் சிந்தனையாளர்கள் என்றும், அவர்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்து மேலிடத் தலைமைக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் அஹமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



