இந்த அக்கறை நாடு முழுவதும் வேண்டும்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்
- Shan Siva
- 26 Jan, 2026
போர்ட்டிக்சன், ஜன 26: போர்ட்டிக்சன், செயிண்ட் லியோனார்ட்ஸ் தேசிய வகை
தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேம்பாட்டு நற்பணி விருந்து லுகுட் ரீஜண்ட் ஹாலில் வெகு
சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர்
சங்கம், வாரியம் மற்றும் ஆசிரிய
பெருமக்களின் ஒத்துழைப்பில் கலை நிகழ்ச்சிக்ளுடன் வண்ணம் காட்டிய இவ்விழாவில்
ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின்
தோற்றுநருமான ஓம்ஸ் பாதியாகராஜன், தேசிய நிலநிதி கூட்டுறவு
கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ சகாதேவன், நெகிரி மாநில முன்னாள் துணை சபாநாயகர் ரவி மற்றும் அம்மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அருள்குமார் ஜம்புநாதன் மற்றும் எஸ். வீரப்பன், முன்னாள்
இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆடல் பாடல் என
மிகச்சிறப்பான அங்கங்களோடு நடைபெற்ற இந்நிகழ்வில் மக்களின் திரளான ஆதரவு
மேலோங்கியிருந்தது.
நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா
தியாகராஜன் தமிழ்ப்பள்ளியின் வளச்சிக்காக ஒன்று கூடியிருக்கும் அனைவருக்கும்
பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகள்தான் நம் அடையாளம். அது
காலத்துக்கும் நிலைத்திருக்க இது போன்ற ஆதரவும், ஒத்துழைப்பும் மிக அவசியம் என்று கூறினார்.
அதோடு பெற்றொர்களும்
தமிழ்ப்பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்ப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க
முன் வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்
37 மாணவர்கள் பயில்கின்ற ஒரு
பள்ளி என்ற போதிலும், அந்தப் பள்ளிக்காக முன்னாள்
இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முன்னாள்
சபா நாயகர், தேசிய நில நிதி கூட்டுறவு
சங்க நிர்வாக இயக்குநர், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஒன்றுகூடி இத்தனை பெரிய பிரமாண்ட
நிதி திரட்டும் நிகழ்வை நடத்தியிருப்பது உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. சுமார் 1500
பேர் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வை இப்பள்ளிக்காக ஏற்பாடு செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் பாராட்டுகளையும்
நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார். தமிழ்ப்பள்ளியின் மீது அவர்கள் வைத்திருக்கும்
ஆர்வமும் அக்கறையும் மெய் சிலிர்க்க வைக்கிறது என்று அவர் கூறினார்.
அதோடு இந்த நிகழ்வு சிறப்பாக
நடைபெற ரீஜென்ட் மண்டபத்தை இலவசமாக வழங்கியிருப்பதோடு, மொத்தம் இந்த விருந்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட
150 மேசைகளில் 15 மேசைகளையும் வாங்கி தமிழ்ப்பள்ளிக்காக ஆதரவு நல்கியிருக்கும் ரீஜெண்ட்
ஹோட்டலின் உரிமையாளரான சீன சகோதரருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ் பா.தியாகராஜன்
கூறினார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து
ஒற்றுமை உணர்வோடு இவர்கள் ஆற்றியிருக்கும் பங்கு காலத்திற்கும் நன்றிக்குரியது என்று
அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் துணை சபா நாயகர்
டத்தோ ரவி அவர்களின் முயற்சியில் பள்ளிக்காக சபை கூடல் மண்டபம் தேவை எனும் நோக்கில்
இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்ட நிலையில், 4 லட்சம் ரிங்கிட் நிர்மாணிப்புகாகத் தேவை என்று திட்டமிடப்பட்டு
இந்த இந்த விருந்து நிகழ்வை நடத்தியிருக்கிறர்கள்.
இதில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்
தலா 15 ஆயிரம் வழங்கியிருப்பதோடு, ரீஜெண்ட் ஹோட்டல் உரிமையாளரும்
15 மேசைகள் வாங்கி, 15 ஆயிரம் ரிங்கிட் கொடுத்து
ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த விருந்து மூலம் ஏறக்குறைய
2 லட்சம் ரிங்கிட் வரைக்கும் ஆதரவு கிடைத்திருப்பதாக அறிகிறேன். விரைவில் பள்ளிக்கான
மண்டப செயல்பாடுகள் தொடங்கட்டும். நிதி திரட்டிப் போக நிறைவுப் பணிக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ
அதற்குத் தாமே பொறுப்பேற்பதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் உறுதியளித்தார்.
மேலும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்
முறைப்படி, சட்ட ரீதியாக எந்தவித சிக்கலும்
இல்லாமல் இதற்கான நடைமுறைகளை வகுத்துக் கொடுப்போம், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என உறுதியளித்திருக்கிறார்கள்
அவர்களுக்கும் தனது நன்றிகள் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
குறைவான எண்ணிக்கையிலான மாணவர்கள் என்றாலும், நமது தமிழ்ப்பள்ளி என்ற உணர்வொடு இவ்வளவு மெனக்கிட்டு இந்த நிகழ்வைப் படைத்து வெற்றி பெற வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதே போன்ற ஆர்வமும் அக்கறையும் நாடு தழுவிய அளவில் மேலோங்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



