அரசுக்கு கணபதிராவ் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்:  நாளை திட்டமிடப்பட்டிருக்கும், சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணி தொடர்பாக அரசின் மௌனம், பாதிக்கப்பட்ட சமூகங்களில் அலட்சியமாகப் புரியப்படுவதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்படாத கோயில்கள் என அழைக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவகாரம், வெளிப்படையாக சித்தரிக்கப்படுவதைவிட மிகச் சிக்கலானது என்றும், இதுகுறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு சமூகத்தை ஆழமாக பாதிக்கும் விவகாரங்களில் அமைச்சர்கள் மௌனம் காக்கும்போது, அந்த மௌனம் அலட்சியமாகவே பார்க்கப்படும்.
அரசு பேச வேண்டும். இந்த விவகாரத்தை விளக்க வேண்டும். மத உணர்வுகளைப் புண்படுத்தாமல், ஆனால் உறுதியுடனும் தெளிவுடனும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

மடானி’ (Madani) நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் தலைமைத்துவம் என்பது, கடினமான விவகாரங்களைத் தவிர்ப்பது அல்ல; மாறாக, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக உறவுகள் தொடர்பான பிரச்சினைகளை கருணையுடனும் தெளிவுடனும் எதிர்கொள்வதாக இருக்க வேண்டும் என்றும் கணபதிராவ் தெரிவித்தார்.

சமய போதகர் ஜம்ரி வினோத் தலைமையிலான அரசு சாரா அமைப்புகளின் கூட்டணி, “சட்டவிரோத” வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, நாளை சனிக்கிழமை இரவு சோகோ (Sogo) வணிக வளாகம் முன்பு பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியில் சுமார் 141 அரசு சாரா அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணி தொடர்பாக பல்வேறு போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சசாலீ ஆதம், பேரணி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் போலீசுக்கு அறிவித்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.

எனவே, அரசின் நீண்ட மௌனம் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கணபதிராவ் எச்சரித்தார். பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஏமாற்றம் எப்போதும் போராட்டங்களாக வெளிப்படாது; சில நேரங்களில் வாக்குப்பதிவில் பங்கேற்காமை மூலமாகவும் வெளிப்படலாம் என்று சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உள்ள பல இந்து கோயில்கள் இன்னும் அதிகாரப்பூர்வ வழிபாட்டுத் தலங்களாக அரசிதழில் (gazette) பதிவு செய்யப்படவில்லை; இதற்குக் காரணம் நீண்டகாலமாக தீர்க்கப்படாத நில நிர்வாகச் சிக்கல்களே என்றும் அவர் விளக்கினார்.

காலனித்துவ காலத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப காலத்திலும், குறிப்பாக தோட்டப் பகுதிகளில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அந்த நிலங்கள் இன்னும் சட்ட ரீதியான குழப்பத்தில் உள்ளன. இதை சட்டமீறலாகக் கருத முடியாது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தீர்வுகள் நமக்குத் தெரியும். அரசியல் உறுதியும், ஒருங்கிணைந்த நிர்வாக நடவடிக்கையும் இருந்தால், இந்த விவகாரத்தை ஓர் ஆண்டுக்குள் முழுமையாகத் தீர்க்க முடியும் என்று கணபதிராவ் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *