வருகிறார் மோடி! ஒன்று திரண்டு நம் ஒற்றுமையை நிரூபிப்போம்! - ஓம்ஸ் பா.தியாகராஜன் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 29: இந்திய பிரதமர் மோடி மலேசியா வருவதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகள் மோடி மலேசியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருகையின் முக்கிய அம்சமாக மலேசிய இந்தியர்கள் மத்தியில் மோடி உரையாற்றவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் திரளான மலேசிய இந்தியர்களின் மத்தியில் பொது மேடையில் அவர் உரையற்றவிருப்பதாகவும், அதற்கான இடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவி திருமதி வானதி சீனிவாசன் தற்போது மலேசியாவுக்கு வருகை தந்து, மோடியின் மலேசிய  வருகைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை  திருமதி வானதி சீனிவாசன் சந்தித்து வருவதோடு. ஆலயங்களுக்குச் சென்றும் தரிசனம் செய்து வருகிறார்.

அவ்வகையில், ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் மரியாதை நிமித்தமாக திருமதி வானதி சீனிவாசனை நேற்று சந்தித்து உரையாடினார்.

இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய ஓம்ஸ் ப.தியாகாராஜன், உலகின் சக்தி மிக்க ஒரு தலைவராக மோடி திகழ்கிறார். சீனா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் மோடியின் நட்பை விரும்புகின்றன. ஆசியாவை பெரும் சக்தி மண்டலமாக மாற்றும் வல்லமை மோடி போன்றவர்களுக்கு இருக்கிறது. எனவே ஆசியான் பொறுப்பேற்று நமது மலேசியாவும் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளது. நமது பிரதமர் அன்வார் இப்ராஹிமும் மோடியுடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. அதோடு நம் மலேசிய இந்தியர்கள் மீது அவர் வைத்திருக்கும் பற்றுதலை அண்மையில் அவர் இந்தியாவில் பேசிய உரையின் மூலம் உணர முடிந்தது. உலகம் முழுக்க உள்ள இந்தியர்களை அரவணைக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருக்கிறது. அந்த வகையில் மோடி மலேசியவிற்கு வருகை தருவதோடு, நம் இந்தியர்களை பெரும் திரளான கூட்டத்திற்கு மத்தியில் சந்திக்கவும் ஆர்வம் கொண்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

அதோடு, மலேசியாவில் நமது இந்தியர்களின் ஒற்றுமையை, சக்தியை, இந்தியாவின் மீதான நமது நம்பிக்கையை, மோடியின் மீதான பாசத்தை நிரூபிக்க இந்தப் பொதுக்கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும். எனவே, நம் மக்கள் ஒற்றுமையாய் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்துகொண்டு நமது பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.

மேலும் மோடியின் பொதுமக்கள் சந்திப்பு குறித்த இடம் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *