ஜம்ரி என்ன சட்டத்திற்கு மேல் உள்ளவனா? கைது செய்யுங்கள்! - ராயர் போலீஸ் புகார்
- Shan Siva
- 04 Mar, 2026
ஜார்ஜ் டவுன், மார்ச் 4: ஜெலுத்தோங் எம்.பி. RSN Rayer, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள இந்து ஆலயத்தை இடிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய சமய போதகர் Zamri Vinoth கூறியதை தொடர்ந்து, அவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.
பினாங்கு இந்து அறநிலைய வாரியத் தலைவராகவும் உள்ள ராயர், வடகிழக்கு மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் அளித்து, ஜம்ரியின் ஃபேஸ்புக் பதிவு தூண்டுதல் தன்மை கொண்டது என்றும், அது இன மற்றும் மத வெறுப்பைத் தூண்டும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நாட்டை நேசிக்கும், பல இன–பல மத ஒற்றுமையை மதிக்கும் மலேசியர்கள் அனைவரும் அமைதியை ப் பாதுகாக்க ஜம்ரிக்கு எதிராகப் புகார் அளிக்க வேண்டும் என அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இந்நிலையில், ஆலயத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள பேரணியை ஜம்ரி சமூக வலைதளங்களில் ஆதரித்திருந்தார். இந்தப் பேரணி வரும் சனிக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, புக்கிட் மெர்தாஜம் எம்.பி. Steven Sim , இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இத்தகைய கூடுகைகள் வெறுப்பை மேலும் தூண்டி நாட்டைப் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், ராயர், போலீசார், உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail, பிரதமர் Anwar Ibrahim மற்றும் அமைச்சரவை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மீண்டும் மீண்டும் இன–மத தூண்டுதல்கள் இடம்பெற்றும், ஜம்ரியை கைது செய்து வழக்கு தொடராதது, அவர் சட்டத்திற்கு மேல் உள்ளவராகப் பார்க்கப்படுவார் என்ற எண்ணத்தை உருவாக்கும் என ராயர் எச்சரித்தார்.
ஜம்ரி, ‘சட்டவிரோத’ வழிபாட்டு தலங்களுக்கு எதிரான பேரணி கோலாலம்பூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தபோது அது நடக்காமல் போனதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், பினாங்கு PKR இளைஞர் பிரிவு, திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை க்கண்டித்து, மத உணர்வுகளைத் தூண்டும் அரசியலுக்கு பினாங்கில் இடமில்லை என்று தெரிவித்தது.
அமைப்பின் தலைவர் Zakwan Mustafa Kamal கூறுகையில், சிறிய அரசியல் லாபத்திற்காக நாம் கொண்டுள்ள அமைதியைப் பணயம் வைக்க வேண்டாம். பினாங்கு மக்கள் தீவிரவாதத்தையும் பிரிவினை அரசியலையும் நிராகரிக்கிறார்கள் என்றார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



