கோயில் ஹராம் பேரணிக்குத் தடை! காவல்துறை அறிவிப்பு
- Shan Siva
- 07 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 7: தலைநகர்
சோகோ (Sogo) வணிக வளாகம் அருகே இன்று மாலை நடைபெற இருந்த “சட்டவிரோத”
வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியை, பொதுப் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து
போலீஸார் தடை செய்துள்ளனர்.
பிப்ரவரி 3-ஆம் தேதி பேரணி ஏற்பாட்டாளர்களிடமிருந்து அறிவிப்பு கடிதம்
கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்புடைய
தரப்புகளிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாக நகர காவல் துறை தலைவர் டத்தோக் ஃபடில்
மார்சஸ் கூறினார்.
மேலும், பிப்ரவரி 5-ஆம் தேதி டாங் வாங்கி காவல் துறை தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி
சுலைமான், பேரணி ஏற்பாட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், பிப்ரவரி 6-ஆம் தேதி சோகோ, பெர்தாமா காம்ப்ளெக்ஸ், ஹாரிசன்ஸ் உள்ளிட்ட
அருகிலுள்ள வணிக வளாக உரிமையாளர்களிடமிருந்து எதிர்ப்பு கடிதங்கள் வந்ததாக ஃபடில்
கூறினார். அந்தக் கடிதங்களில், பேரணி நடந்தால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்பட
வாய்ப்புள்ளதாகவும், பல்வேறு பண்டிகைகள் காரணமாக அந்தப் பகுதி கடுமையாக நெரிசலாக
இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டும் சுயாதீனத் தகவல்களும் தங்களுக்குக் கிடைத்ததாக
அவர் கூறினார்.
இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மதிப்பீடுகள்
மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில், பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனக்
கருதப்பட்டதால், அந்தப் பேரணியை நடத்த அனுமதி வழங்கப்படாது என போலீஸார்
முடிவு செய்துள்ளனர் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் அந்தக் கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்
என்றும், பொது அமைதியை பாதிக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
ஃபடில் எச்சரித்தார்.
பொது பாதுகாப்பும் நலனும் போலீஸாரின் முதன்மை
முன்னுரிமையாகும் என்றும் அவர்
கூறினார்.
அரசின் முன்கூட்டிய ரத்து கோரிக்கையையும் பொருட்படுத்தாமல்,
பேரணியை
நடத்துவோம் என ஏற்பாட்டாளர்கள் பிடிவாதமாக கூறிய நிலையில், இந்த போலீஸ் அறிக்கை
வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய போதகர் ஜம்ரி வினோத் தலைமையிலான
அமைப்புகளின் கூட்டமைப்பால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “சட்டவிரோத”
வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம்
கொடுப்பதே இதன் நோக்கம் என கூறப்பட்டது.
இந்த விவகாரம் கடந்த சில வாரங்களாக தீவிரமாக பேசப்பட்டு
வரும் நிலையில், இந்து சமூகத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் அமைதியைக் கடைப்பிடிக்க
வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். பேரணியைத் தடுக்க போலீஸும் அரசும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனக் கோரி போலீஸ் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்று
மலேசியாவுக்கான வருகையை அடுத்தும் உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



