தமிழ்தான் உலகை இந்தியாவுடன் இணைக்கிறது! இந்தியாவின் வெற்றி; மலேசியாவின் வெற்றி! - மோடி புகழாரம்
- Shan Siva
- 08 Feb, 2026
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர்
நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மலேசியா வருகை புரிந்துள்ள நிலையில், நேற்று அவருக்கு
விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்று இந்திய பிரதமரை வரவேற்றார். இரு நாட்டுப் பிரதமர்களும்
கட்டி அணைத்து தங்களின் அன்பினைப் பரிமாறிக்கொண்டனர். இந்திய பிரதமருக்கு தேசத்தின்
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மோடி, மலேசியா
மற்றும் இந்தியா தேசியக் கொடிகளை அசைத்து வரவேற்ற 100 மாணவர்களைப் பார்த்து உற்சாகமாக
கையசைத்தார்.
பாரம்பரிய இசை, பல்லினத்தைச் சேர்ந்தவர்களின்
நடனம் என சிறப்பான ஏற்பாட்டில் வரவேற்பு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, மைன்ஸ் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு
மையத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வில் மோடி கலந்து கொண்டார்.
அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினரின் சார்பில் உற்சாக வரவேற்பு
வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய மோடி, ‘தமிழ் மொழி தான் உலகின் பிற
நாடுகளுடன் இந்தியாவை இணைக்கிறது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழ் இலக்கியம்
என்றும் அழியாப் புகழ் கொண்டது,’ என்று பேசினார்.
இதற்கு நம் மலேசிய இந்தியர்கள் ஆரவாரத்தோடு கரவொலி எழுப்பி, உற்சாக நன்றியை மோடிக்குத் தெரிவித்தனர்.
தமிழில் வணக்கம் கூறி மோடி தனது உரையை தொடங்கினார்.
உங்களின் இந்த சிறப்பான வரவேற்பு நமது கலாசாரத்தின்
பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. முதலாவதாக இந்த நிகழ்ச்சியில் என்னை பங்கேற்க
செய்த நண்பர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா–மலேசியா நட்பு மற்றும் எதிர்கால சாதியக்கனவுகள் குறித்து அவர் பேசியதற்கு
நன்றி.
அதுமட்டுமல்லாமல், விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றுடன், அவர் (மலேசிய பிரதமர்) தனது காரிலேயே என்னை
அழைத்து வந்தார். இது இந்தியா மற்றும் உங்கள் அனைவரும் மீது அவர் வைத்திருக்கும்
அன்பு மற்றும் மரியாதையை காட்டுகிறது.
கடந்தாண்டு மலேசியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் என்னால்
பங்கேற்க முடியாமல் போனது. ஆனால், விரைவில் மலேசியா வருவேன் என்று என்னுடைய நண்பர் அன்வார்
இப்ராஹிமிடம் சொன்னேன். அதன்படி, இன்று நான் இங்கு வந்திருக்கிறேன்.
உங்கள் இதயங்களில் இந்தியாவிற்கு என்றுமே தனி இடம் உண்டு
என்பதை நான் அறிவேன். எனது சொந்த மாநிலமான குஜராத்தில் 2001ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, உங்களில் பலரும் ஒன்றிணைந்து உதவி செய்தீர்கள். அதற்காக
உங்கள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா
சுதந்திரம் பெறுவதற்காக உங்களின் முன்னோர் பலரும் பெரும்
தியாகங்களைச்
செய்துள்ளனர். அவர்களில் பலர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய
ராணுவத்தில் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். மலேசியாவில் உள்ள நேதாஜி சேவை மையம்
மற்றும் நேதாஜி நல அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்.
உலகிலேயே இந்திய
வம்சாவளியினர் அதிகம் வாழும் 2வது மிகப்பெரிய நாடு மலேசியாதான். இந்தியா
மற்றும் மலேசிய மக்களை இணைக்கும் பல விஷயங்கள் உள்ளன. நாம் ஒருவரை ஒருவர் நன்றாகப்
புரிந்து கொள்கிறோம். நமது மொழிகளுக்கும் மலாய் மொழிக்கும் இடையே உள்ள ஏராளமான
பொதுவான வார்த்தைகளே இதற்கு காரணம்.
இந்திய இசையும், திரைப்படங்களும்
மலேசியாவில் மிகவும் பிரபலம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரதமர் அன்வர்
இப்ராஹிம்கூட மிகச் சிறப்பாகப் பாடுவார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இந்தியாவில் உள்ள பலருக்கு அது தெரியாது.
கடந்த முறை
இந்தியா வந்திருந்த போது, பலரும் வியந்து போனார்கள். அவர் இந்தியாவில்
பழைய ஹிந்திப் பாடலைப் பாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. அதோடு, அவர் எம்ஜிஆரின்
தமிழ்ப் பாடல்களை மிகவும் விரும்புவது ஒரு அற்புதமான விஷயம்.
தமிழ் மொழி
உலகின் பிற நாடுகளுடன் இந்தியாவை இணைக்கிறது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழ்
இலக்கியம் என்றும் அழியாப் புகழ் கொண்டது. விரைவில் மலேசியாவில் திருவள்ளுவர்
கலாசார மையத்தை அமைக்கப் போகிறோம் என்று தமிழின் மாண்பினை எடுத்துரைத்த மோடி,
இந்தியாவின் துணை
அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்
ஆகியோர் தமிழர்கள். மலேசியா போன்று என் அரசிலும் தமிழர்கள் அதிகம் என்று பெருமிதமாகப்
பேசினார்.
இந்தியா உலகின் 3வது பெரிய
பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல்
உட்கட்டமைப்பை இந்தியாவில் நிறுவியுள்ளோம். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவின் வெற்றி, மலேசியாவின்
வெற்றி, இவ்வாறு மோடி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Justin McCarty
Hey there, I was wondering if you took guest posts on tamilmalar.my? If so, how would I go about getting one on your site? If there is a fee, let me know. Also, if you have any other sites you can get me a post on please list them. Thanks Justin



