சமய நெறியும், கல்வியும் மிக அவசியம்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், அக் 29: ஒம்ஸ் அறவாரியத்தின் சார்பில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வரும் இலவச சமய வகுப்பில், இம்முறை சிறப்பு அங்கமாக பஞ்சபுராண பாராயணம் அங்கம் இடம்பெற்றது.

ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வின்,  சிறப்பு அழைப்பாளராக தமிழகத்திலிருந்து கயிலை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் கயிலை துரைசாமி வருகை தந்து, மாணவர்களுக்கு திருமுறைகள் குறித்து விளக்கமளித்தார். இத்தகைய சமய வகுப்புக்கு முதலில் பிள்ளைகளை அனுப்புகின்ற பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.  மற்ற மதத்தினர் தங்களின் மத வழிபாடுகளைத் தவறாமல் கடைபிடிக்கிறார்கள், ஆனால் நம் பிள்ளைகள் நமது வழிபாடுகள் குறித்து அவ்வளவாகத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதாகவும், அலட்சியமாக இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.  நிகழ்வில் அனைவருக்கும் உருத்திராட்சம் மற்றும் இறைவாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை அவர் வழங்கினார்.

நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன், சமய வகுப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் சீர்குலைந்திருக்கும் கட்டொழுங்கு பிரச்னைக்கு முக்கிய காரணம் சமய நெறிகள் மற்றும் நீதிகள் போதிக்கப்படுவது குறைந்திருப்பதுதான் என அவர் சுட்டிக்காட்டினார். நாளைய தலைமுறை தரமானவர்களாக உருவாக சமய அறிவு குறித்த விழுப்புணர்வு அவசியம். அதோடு வீடுகளிலும் சமய நெறிகள் தவறாமல் வழிகாட்டப் பட வேண்டும் என அவர் கூறினார்.

அண்மையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அவருக்கு இவ்வேளையில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

தனது தந்தையார் சமயப்பற்று மிக்கவராக இருந்ததோடு, வீட்டில் அனைவருக்கும் தேவாரம், திருவாசகத்தை எல்லாம் அறிமுகப்படுத்தி சமய நெறிகளோடு எங்களைப் பழக்கப்படுத்தினார் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது இலவச சமய வகுப்பினைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், சமய நெறியும் கல்வியும் நம் சமுதாயத்திற்கு மிக அவசியம் என்றும் அவர் கூறினார்.

விருந்துபசரிப்போடு நடைபெற்ற இந்நிகழ்வில் சமய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர்.

ஓதுவார் செல்வம் மற்றும் ஆசிரியை திருமதி சித்திரை மலர் ஆகியோரின்  போதனையில் கடந்த இரண்டு வருடங்களாகப் பயிற்சி பெற்று வரும் சமய வகுப்பினைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிழ்கள் வழங்கப்பட்டன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *