பப்பாராயுடு மன்னிப்புக் கேட்க வேண்டும்! 7 நாள் கெடு! - டான்ஸ்ரீ நடராஜா எச்சரிக்கை
- Shan Siva
- 08 Jan, 2026
பத்துமலை, ஜன 8: பத்துமலை மின் படிக்கட்டுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இன்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையிலான குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு பத்துமலை ஆலய அலுவலக அரங்கில் நடைபெற்றது.
அதில், பத்துமலை திருத்தலம் தனி நபருக்குச் சொந்தமானது என்பதுபோல் செய்தியைச் சித்தரித்து சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பப்பாராயுடு செய்தியாளர்களிடம் பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
உண்மை என்னவென்றே தெரியாமல் அவர் பேசியிருப்பது பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இது தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
எனவே. பப்பாராயுடு இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இதன் அடிப்படையில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம்.
அந்த நோட்டீஸ்க்கு அவர் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று டான்ஸ்ரீ நடராஜா எச்சரித்தார்.
மேலும் இவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அதிக விளக்கம் தருவது கூடாது என்றும் கூறினார்.
ஒரு உண்மையை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் பத்துமலை முருகன் திருத்தலம் என்பது பொதுச் சொத்து. அது ஒரு தனிநபருக்கு சொந்தமானது அல்ல.
அதே போல் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் இயங்குவதால், எந்தவொரு நடவடிக்கைகளும் முடிவுகளும் சட்டத் துறை தலைவரின் அனுமதியோடுதான் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே இஷ்டத்துக்குப் பேசாமல் சட்டத்திற்கு உட்பட்டு உண்மையைப் பேசுங்கள். பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்காதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எனவே, இனிமேலும் ஆலயத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என டான்ஸ்ரீ தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



