மலேசியா - இந்தோனேசியா எல்லை விவகாரம்! - அன்வார் நாடாளுமன்றத்தில் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 4: மலேசியா–இந்தோனேசியா எல்லை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முடிவில், சுங்கை சினாபாட் மற்றும் சுங்கை செசாய் பகுதிகளில் உள்ள 7.8 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மலேசியா உறுதி செய்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த நிலப்பரப்பு 780 ஹெக்டேர் அல்லது 1,927 ஏக்கருக்கு சமமானது என்றும், 1977 முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் எல்லை நிர்ணய பேச்சுவார்த்தைகளின் பயனாக இது கிடைத்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

சுங்கை சினாபாட் மற்றும் சுங்கை செசாய் பகுதிகளில் மொத்தம் 5,987 ஹெக்டேர் நிலம் சர்ச்சைக்குரியதாக இருந்ததாக அன்வார் கூறினார். வரலாற்று வரைபடங்களில் இந்தப் பகுதிகள் இந்தோனேசியாவின் நிர்வாகத்தில் இருந்ததாகக் காட்டப்பட்டாலும், எல்லை வரைபடங்கள் இறுதி செய்யப்படாததால் மலேசியா இதை ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியா–இந்தோனேசியா நில எல்லையின் மொத்த நீளம் சுமார் 2,064 கிலோமீட்டர் எனவும், இதில் சபா–வட கலிமந்தான் பகுதி 419.4 கி.மீ., சராவாக்–மேற்கு கலிமந்தான் பகுதி 1,644.6 கி.மீ. எனவும் அவர் விளக்கினார்.

தற்போது, வட கலிமந்தான் பகுதியிலுள்ள புலாவ் செபாட்டிக் மற்றும் சுங்கை சினாபாட்–சுங்கை செசாய் ஆகிய இரண்டு எல்லைப் பிரச்சினைகள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புலாவ் செபாட்டிக் பகுதியில் செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில், மலேசியாவுக்கு 0.05 சதுர கிலோமீட்டர் (5 ஹெக்டேர்) நிலம் கிடைத்ததாகவும், இதனால் கம்போங் கபுலங்கலோர், கம்புங் லெபாகா மற்றும் கம்புங் டெடாகாஸ் ஆகிய மூன்று கிராமங்களின் சிறிய பகுதிகள் மலேசிய எல்லைக்குள் வந்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து, மலேசியா தனது நிலப்பரப்பை இந்தோனேசியாவுக்கு ஒப்படைத்ததாக வெளியான தகவல்களை அன்வார் மறுத்தார். எல்லை தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் சபா மாநில அரசின் முழு ஒப்புதலுடன் மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விளக்கம், இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்குப் பதில் கூறும் விதமாக வழங்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *