நஜீப்பை ஏற்கத்தான் வேண்டும்! - அந்தோணி லோக்
- Shan Siva
- 12 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 12: தற்போதைய ஒன்றுபட்ட அரசில் தங்களின் கூட்டணி கட்சியான அம்னோவை முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஒருகாலத்தில் வழிநடத்தினார் என்பதை, விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும், டிஏபி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்த உறவை சேதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் நினைவூட்டப்பட்டுள்ளது.
சீன மொழி பாட்காஸ்டில் பேசிய டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபுக், அண்மைய சர்ச்சையை ஏற்படுத்திய பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யினின் சமூக ஊடகப் பதிவைப் பற்றி தாம் அவருடன் பேசியதாகத் தெரிவித்தார்.
யோவின் நடவடிக்கையை தாம் ஏற்கவில்லை என லோக் கூறினாலும், அவரை கண்டிக்கவில்லை என்று தெரிவித்தார்.
டிஏபிக்கு தனித்த கொள்கைகளும் நிலைப்பாடுகளும் இருந்தாலும், கட்சிகளுக்கிடையேயான உறவுகளைக் கெடுப்பது தேவையற்றது என்றும் அவர் கூறினார்.
அம்னோவுடன் ஒத்துழைப்பு, அரசின் செயல்பாடு, சீர்திருத்தங்களை முன்னெடுப்பது குறித்து பேச வேண்டுமெனில் அனைவரும் தொடர்பில் இருக்க வேண்டும். அந்த உறவுகளை நாம் சேதப்படுத்தினால், தொடர்பாடல் மிகவும் கடினமாகிவிடும் என்று அவர் கூறினார்.
கடந்த மாதம், நீதிமன்றம் நஜீப்பின் வீட்டுக் காவல் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, யோ இந்த ஆண்டு இறுதியில் 'கொண்டாட இன்னொரு காரணம்' என்று அது குறித்து எழுதியிருந்தார். இதனால் அம்னோ தலைவர்கள் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள சிலர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதற்குப் பதிலளித்த அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ராப் வஜ்டி டுசுகி, தங்களின் பங்களிப்புகளை மதிக்காதவர்களுடன் தொடர்ந்த ஒத்துழைப்பை அம்னோ மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
யோ மன்னிப்புக் கேட்க மறுத்ததைத் தொடர்ந்து, பூச்சோங் அம்னோ, பக்காத்தான் ஹராப்பான் இணை அமைப்புடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. அதனைத் தொடர்ந்து, அம்னோ இளைஞர் பிரிவு சிறப்பு மாநாடு நடத்தி, ஒன்றுபட்ட அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என கட்சியை வலியுறுத்தியது.
யோ இதைக் கவனமாக் கையாண்டிருக்கலாம் என்று லோக் கூறினார்.
உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் இந்தச் செயல்களும், இந்தச் சொற்களும் தேவையற்றவை என்பதே தாம் சொல்ல வருவது என்றார்.
72 வயதான நஜீப், SRC இன்டர்நேஷனல் நிறுவன நிதியில் இருந்து RM42 மில்லியனை தவறாகப் பயன்படுத்திய வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதையடுத்து, 2022 ஆகஸ்ட் மாதம் முதல் குறைக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், வீட்டுக் காவலுக்கு சட்டப்பூர்வமான எந்தவொரு ஏற்பாடும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



