‘இசை முரசு’ இளவரசு இசை விருந்து! 50 ஆண்டு கால இசைப் பயணத்தின் உற்சாக விழா

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், பிப் 23‘வைகறை ஸ்டூடியோஸ்’ வழங்கும் ‘இசை முரசு’ இளவரசுவின்  50  ஆண்டு கால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக  பிரமாண்ட இசை விருந்து, வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி (1.3.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்டாலிங் ஜெயாவில் உள்ள  Auditorium Tan Sri Jeffrey Cheah அரங்கில், மாலை 6.30 மணி தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறவிருக்கிறது. 

நம் நாட்டில் இசைத்துறையில் 50 ஆண்டு காலம் தனது தனித்துவமிக்க இசைத்திறனால் பல்சுவை படைப்புகளை வழங்கி வரும் இசை முரசு இளவரசு, கடந்த 50 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட  பாடல்களை இசையமைத்து உருவாக்கியுள்ளார்.

1995ஆம் ஆண்டு ‘விடியல்’ எனும் முதல் இசைத் தொகுப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பல பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் எனப் பல பாடல்களைத் தொடர்ந்து உருவாக்கி மலேசியத் தமிழ் இசைத் துறையில் தனித் தடம் பதித்துள்ளார்.

மலேசியாவின் பல மேடை நாடகங்களுக்கும் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார். சிறுவர்களுக்கான பல பாடல்களையும் உருவாக்கித் தனி முத்திரை பதித்துள்ளார்.

ஒலிப்பேழை (Cassettes), குறுந்தட்டு (CD ), ‘யூடியூப்’ (Youtube) என இவரின் இசை வடிவங்கள் பல்வேறு தளங்களிலும் நிரம்பியிருப்பதோடு, தொடர்ந்து தனது படைப்புகளைப் பதிவேற்றமும் செய்து வருகிறார்.

அந்த வகையில் இவரின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தின் ஆச்சரியத் தொகுப்புகள்  கலைஞர்களால் படைக்கப்படவுள்ளன.

இவர் இசையமைத்தப் பாடல்களைப் பாடிய, அதற்கு இசை வாசித்த கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கிறார்கள். அவர்களுள் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் அடங்குவர். குறிப்பாக தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடகர்களான கலைமாமணி TL மகராஜன், ‘படையப்பா ஸ்ரீராம்’ @ பாலகாட் ஸ்ரீராம் ஆகியோரும் இசை முரசு இளவரசுவின் இந்த இசை விருந்தில் இணைகிறார்கள்.

மேலும், நம் நாட்டுக் கலைஞர்களான பிரித்தா பிரசாத், அல்லிமலர் மனோகரன், துருவன் மாரியப்பன், சகிலா இளவரசு, புவனேஸ்வரி அமாவாசி, அருள்வேந்தன் மனோகரன், வளரும் கலைஞர்களான ‘பாகாட் மின்னல்’ அபிஷேகப்பிரியன், ஜித்தேந்திரன் குணசேகரன், லினேயா தினகரன், சர்வேத்தா மகேந்திரன் ஆகியோரும் பாடவிருக்கிறார்கள். தமிழ் நாடு - மலேசியா நாடுகளின் பின்னணி இசைக் கலைஞர்கள் 12 பேர் கொண்ட இசைக்குழு பின்னணி இசையும் வழங்கவுள்ளனர்.

பாடல் வரிகள் எழுதிய உள்ளூர் கவிஞர்களின் திறன்களையும்,பாடல் பிறந்த பின்னணிக் கதையையும் விளக்கிச் சொல்லி இந்நிகழ்ச்சியை  முன்னின்று இளவரசு நெடுமாறனே வழி நடத்துவது இன்னும் மெருகூட்டும். சில பாடல்களுக்கு நடனங்களும் இடம்பெறவுள்ளது கூடுதல் உற்சாகம்.

நமது நாட்டிலும் திரைப்படப் பாடல்களுக்கு நிகராகப் பாடல் வரிகள் எழுத, இசையமைக்க, பாடல்களைப் பாட முடியும் என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழகக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்குப் படையெடுக்கும் இரசிகப் பெருமக்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கும் ஆதரவு தந்தால் நம் நாட்டிலும் மேலும் தரமான படைப்புகள் உருவாகும் நிலை மேலோங்கும்.

புகழ் பெற்ற தமிழ்நாட்டுக் கலைஞர்கள் நம் நாட்டுப் படைப்புகளில் பங்கேற்கும் அதே வேளை, நம் நாட்டு இசை ஆர்வலர்கள் நம் கலைஞர்களுக்கு ஆதரவு தருவது நமது கடமையாகக் கொள்ள வேண்டும்.

தரமான நேர்த்தியான நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டு வருவதால், இது ரசிகர்களை ஒரு புதுமையான கோணத்தில் மகிழ்விக்கும் என நம்பலாம்.

இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, சரியாக மாலை 6.00 மணிக்குத் தேநீர் விருந்து உபசரிப்புத் தொடங்கும். 6.30 மணிக்கு மின்திரையில் சில படைப்புகள் இடம்பெறும். 7.00 மணிக்கு நிகழ்ச்சி தமிழ் வாழ்த்துடன் தொடங்கும். எனவே பொதுமக்கள், பிரமுகர்கள் அனைவரும் சரியாக 6.50 மணிக்கு அரங்கத்திற்குள் வந்து அமர்ந்துவிடும்படி ஏற்பாட்டாளர்கள் கனிவுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

இசை முரசு ஒலிக்கக் காத்திருக்கிறது உங்களின் செவிகளுக்காக...

வாருங்கள் இளவரசுவின் இசை இராஜாங்கத்தில் நாமும் பங்கேற்போம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *