பிரதமர் புரிந்துகொண்டார்! மந்திரி பெசார் OK சொல்லிவிட்டார்! எல்லாம் சுபம்! - டான்ஸ்ரீ நடராஜா

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன31: பத்துமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் எஸ்கலேட்டர் (Escalator) அமைக்கும் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் ஜூலை மாதத்திற்குள் தீர்வு காணப்படும், அதன் பின்னர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் ஆர். நடராஜா தெரிவித்தார்.

பத்துமலையில் நடைபெறும் தைப்பூச விழாவை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் வகித்து வரும் நடராஜா, இந்த விவகாரத்தில் எஞ்சியுள்ள தடைகள் முழுக்க தொழில்நுட்ப ரீதியானவை மட்டுமே என்றும், அவை சில மாதங்களுக்குள் தீர்க்கப்படும்  என்றும் சிலாங்கூர்  மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி உறுதியளித்துள்ளதாக கூறினார்.

இந்த விவகாரம்,  நேற்று பத்துமலைக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட வருகையின் போது விவாதிக்கப்பட்டதாகவும், அப்போது பிரதமர்  மற்றும் மந்திரி பெசாருடன் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் தெளிவாக கூறினார். இது சமூக நலன் சார்ந்த விஷயம்; தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்  என்று நடராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.

பத்துமலையில் எஸ்கலேட்டர் அமைக்கும் முன்மொழிவு, அதனுடன் தொடர்புடைய வணிக வளர்ச்சி திட்டத்திற்கு தற்காலிக ஆக்கிரமிப்பு அனுமதி (TOL) வழங்க மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலுவையில் இருந்தது. அந்த வணிகத் திட்டத்தில் எஸ்கலேட்டர் அமைப்பும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆலய நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்றும், இது சர்ச்சையல்ல; நிர்வாக மற்றும் தொழில்நுட்ப தாமதம் மட்டுமே என்றும் நடராஜா விளக்கினார்.

இது ஒரு சிறிய தொழில்நுட்ப விஷயம் தான். ஆனால் சிலர் அதை பெரிய பிரச்சினையாக மாற்றிவிட்டனர்  என கூறிய அவர், தற்போது விவகாரம் தீர்வு காணப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஊகங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஆலயம் நீதிமன்ற உத்தரவின் கீழ் செயல்பட்டு வருவதால், சில நிர்வாக நடவடிக்கைகள் சிக்கலாக இருந்ததாகவும் அவர் கூறினார். இதனை பிரதமர் புரிந்து கொண்டு, மந்திரி பெசாரிடம் தெரிவித்ததாகவும், இருவரும் இணைந்து தீர்வு காண ஒப்புக் கொண்டதாகவும் நடராஜா தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்கும் பத்துமலை ஆலயத்திற்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த நடராஜா, சமீபத்தில் ஆலய வளர்ச்சிக்காக கூடுதல் 10 இலட்சம் ரிங்கிட் (RM1 மில்லியன்) நிதி ஒதுக்கீட்டை பிரதமர் அங்கீகரித்ததாகவும் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *