ஹம்சாவை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்! - பெர்சாத்துவில் வலுக்கும் எதிர்ப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 3: பெர்சாத்து (Bersatu) கட்சித் தலைவர் பதவியில் இருந்து முகைதீன் யாசின் விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசல் இஸ்மாயில் அசீஸ் கடுமையாக நிராகரித்துள்ளார். அதற்கு பதிலாக, துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் யூனுஸ் நூர்தின் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளித்த துன் ஃபைசல், சபா மாநிலத் தேர்தல் இயக்குநராக இருந்த ஹம்சா தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றத் தவறியதாக குற்றம்சாட்டினார். கடந்த நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலில் பெர்சாத்து ஒரு இடத்தைக் கூட வெல்லத் தவறியதையே இதற்கான சான்றாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஹம்சா, கட்சிக்குள் உள்ள தனது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தத் தவறியதால், பெர்சாத்து அரசியலமைப்பும் மீறப்பட்டதாகவும் துன் ஃபைசல் குற்றஞ்சாட்டினார்.

பெயர்கள் குறிப்பிடப்படாதபோதிலும், எம்.பிக்கள் வான் சைஃபுல் வான் ஜான், சைஃபுதீன் அப்துல்லா, வான் அக்மத் ஃபைசல் வான் அக்மத் கமால் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டதைக் குறித்தே அவர் சுட்டிக்காட்டியதாக நம்பப்படுகிறது.

முகைதீன் யாசின் விலக வேண்டும் என்று கேட்பதைவிட, தனது கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்றத் தவறிய துணைத் தலைவர் பதவியில் இருந்து ஹம்சா விலக வேண்டும் என்று யூனுஸ் கேட்க வேண்டும் என துன் ஃபைசல் தெரிவித்தார்.

மேலும், நவம்பரில் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்களில் ஒருவராக இருந்ததால், சபா பெர்சாத்து செயலாளராக இருக்கும் யூனுஸ் தானே தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் தலைவர் பதவியை நீக்குவது தொடர்பாக பாஸ் (PAS) கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, முகைதீன் யாசின் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி, அந்த இடத்தில் ஹம்சா சைனுடினுக்கு வழிவிட வேண்டும் எனக் கோரிவரும் மூத்த தலைவர்களில் யூனுஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PN அமைப்பை மறுசீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக, PN தலைவர் பதவியை நீக்குவதற்கு பாஸ் மற்றும் பெர்சாத்து இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதாக முகைதீன் கூறியிருந்தார். ஆனால், அந்த விவகாரம் குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என பாஸ் மறுத்துள்ளது.

யூனுஸ், பெர்சாத்து தலைவர் என்ற வகையில் முகைதீன் ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுத்து, எதிர்க்கட்சியின் முக்கிய கூட்டாளியான பாஸுடன் பிளவுகளை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த துன் ஃபைசால், முகைதீன் எந்த தவறும் செய்யவில்லை என்றும், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்சித் தலைவருக்கு நிர்வாக அதிகாரம் இருப்பதை யூனுஸ் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், PN மறுசீரமைப்பு தொடர்பான முகைதீன்–ஹாடி பேச்சுவார்த்தைகள் இன்னும் முன்மொழிவு நிலையிலேயே உள்ளதாகவும், எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *