மோடியை வரவேற்கும் அன்வார்!
- Shan Siva
- 07 Feb, 2026
புத்ராஜெயா, பிப் 7: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியாவிற்கு வருகை தரும் நிலையில், அவரை தாம் வரவேற்க உள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மோடியின் அதிகாரப்பூர்வ பயணம் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் நடைபெறுவதாக கூறப்பட்டது. இது, 2024 ஆகஸ்டில் அன்வார் இந்தியாவுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்திற்கான பரஸ்பரத் தொடர்ச்சியாகும்.
மோடியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் இணைந்து வருவதாகத் தெரிபிக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு பெர்டானா புத்திரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படவுள்ளதுடன், பின்னர் ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் பிரதமர் அன்வாருடன் இருதரப்பு சந்திப்பும் நடைபெற உள்ளது.
இரு தலைவர்களும் மலேசியா–இந்தியா இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பதுடன், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழிலாளர் விவகாரங்கள், சுற்றுலா, இணைப்பு வசதிகள், வேளாண்மை மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயவுள்ளனர். இதேபோல், இருவருக்கும் பொதுவான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளும் பேசப்பட உள்ளன.
2025ஆம் ஆண்டில் மலேசியா–இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் RM79.49 பில்லியனாக இருந்தது. இதில், இந்தியாவுக்கு மலேசியா ஏற்றுமதி செய்தது RM52.30 பில்லியன் மதிப்பிலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி RM27.19 பில்லியன் மதிப்பிலும் இருந்தது.
இந்தியாவுக்கு மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் செம்பனை எண்ணெய் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேளாண் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணு தயாரிப்புகள் அடங்கும். இந்தியாவிலிருந்து மலேசியா இறக்குமதி செய்வதில் வேளாண் பொருட்கள், பெட்ரோலிய தயாரிப்புகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் முக்கியமானவை.
தென் ஆசியப் பிராந்தியத்தில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



