மத பிரச்சினைகள் - பாகுபாடற்ற சட்ட அமலாக்கம் தேவை! - சொல்கிறது பாஸ்
- Shan Siva
- 11 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 11: மத விவகாரங்களை, குறிப்பாக
வழிபாட்டு இடங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளை, சமூகங்களில்
பதற்றத்தை தூண்டாமல் கவனமாக கையாள வேண்டும் என்று பாஸ் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது.
மலேசியா பல இன, பல
மத அமைப்பைக் கொண்ட நாடு என்பதால் இன மற்றும் மத தொடர்பான பிரச்சினைகளை கையாளும்
போது அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று PAS பொதுச்
செயலாளர் Takiyuddin
Hassan தெரிவித்துள்ளார்.
பல்வேறு சமூகங்களுக்கு இடையில் வெறுப்பு,
பகைமை மற்றும் சந்தேகங்களை விதைக்க முயல்வது மிகவும்
பொறுப்பற்ற செயல். இப்படியான முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்று அவர் வெளியிட்ட
அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான அவர்,
தற்போதைய பதற்ற நிலையை வெளிப்படையாகவும் நியாயமாகவும் கையாளுவதில் அதிகாரிகளின் பங்கு மிக
முக்கியமானது என்றும் கூறினார்.
தவறான புரிதல்கள், ஊகங்கள் மற்றும் அதிகரிக்கும் பதற்றத்தைத் தவிர்க்க தெளிவான
விளக்கங்கள், பாகுபாடற்ற சட்ட அமலாக்கம் மற்றும்
சரியான மேலாண்மை அவசியம்
என்றும் அவர் தெரிவித்தார்.
Kota Bharu
நாடாளுமன்ற உறுப்பினரான தகியுதீன் குறிப்பிட்ட சம்பவங்களைச்
சொல்லவில்லை. எனினும், அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டு
இடங்கள் மற்றும் குர்ஆன் அவமதிப்பு சம்பவங்கள் தொடர்பான பல நிகழ்வுகள் பின்னணியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கூடுதலாக, “செகு
சந்திரா” என
அழைக்கப்படும் ஒரு செயற்பாட்டாளரின் மூன்று வாகனங்களுக்கு தீ வைப்பு, திரிசூல் அவமதிப்பு குற்றச்சாட்டு,
மேலும் சர்ச்சைக்குரிய சமயபோதகர் Zamri
Vinoth மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல்
போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், தேசிய
ஒற்றுமை அமைச்சர் Aaron
Ago Dagang நேற்று போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு
எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பல இனங்களும் பல மதங்களும் கொண்ட மலேசியாவில் மத தூண்டுதல், வெறுப்பு, வன்முறை அல்லது இன-மத உணர்வுகளைத் தூண்டும் எந்தவொரு தீவிர நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



