கோயில் ஹராம் பேரணி! தடுக்க வேண்டிய அவசியமில்லை! - பாஸ் கருத்து
- Shan Siva
- 05 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 5: சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக இந்த சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணியை எதிர்த்து எழுந்துள்ள விமர்சனங்களை, பாஸ் தகவல. பிரிவுத் தலைவர் அக்மத் ஃபாத்லி ஷாரி நிராகரித்துள்ளார்.
தனது கட்சியின் பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணிக் கட்சிகளான கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அந்த பேரணி குறித்து அஞ்ச வேண்டியதோ அல்லது தடுக்க வேண்டியதோ இல்லை என்று ஃபாத்லி தெரிவித்தார்.
பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், சமய போதகர் ஸாம்ரி வினோத் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பேரணி, சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்துவதே அதன் நோக்கம் என்றார்.
இதனைத் தடுக்க வேண்டிய அவசியமில்லை. யாரும் அஞ்ச வேண்டியதுமில்லை.
மத்திய அரசியலமைப்பின் கீழ் தடை செய்யப்பட்ட உரிமைகளை கோரும் பேரணிகளுடன் — உதாரணமாக, LGBTஆதரவு பேரணிகளுடன் இதனை ஒப்பிட முடியாது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
இந்த பேரணியை புறக்கணிக்குமாறு பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளிடம் MIPP வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் பி. புனிதன், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசினுக்கு கடிதம் எழுதி, கட்சி உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொள்ளத் தடை விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
PN கூட்டணிக்குள் உள்ள நெருங்கிய ஒத்துழைப்பை பாதுகாப்பதற்கும், நாட்டின் நல்லிணக்கம், அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இது அவசியம் என MIPP தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பேரணியைத் தடுக்குமாறு கோரி, காவல்துறை தலைவர் (IGP) காலித் இஸ்மாயிலுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
கெராக்கான் துணைத் தலைவர் ஜி. பரமேஸ்வரனும் இந்த போராட்டத்தை விமர்சித்துள்ளார். இன மற்றும் மதத் தூண்டுதல்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைதியான கூடுகைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்று அவர் கூறினார்.
ஸாம்ரி வினோத் தலைமையிலான பல அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு, “சட்டவிரோத” வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாளை மறுநாள் சனிக்கிழமை இரவு கோலாலம்பூரில் உள்ள சோகோ வணிக வளாகம் முன்பு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த பேரணி தொடர்பாக பல காவல் புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



