KLIA -வில் RM 19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்! - 7 பேர் கைது

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூலை 21: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) RM19.82 மில்லியன் மதிப்புள்ள, மொத்தம் 247.8 கிலோ கஞ்சாவைக் கடத்தும் முயற்சிகளை காவல்துறை முறியடித்து, ஏழு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.

 ஒரு மலேசியப் பெண் மற்றும் நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் உட்பட ஆறு வெளிநாட்டினர், போதைப்பொருள் கடத்துபவர்களாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.

KLIA காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை காவல்துறை ஆகியவை இணைந்து நடத்திய நடவடிக்கைகளில், ஜூலை 11, 13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாக நம்பப்படும், சந்தேக நபர்களின் பயணப் பைகளில் இருந்து மொத்தம் 393 பொட்டலங்கள் கஞ்சாவை காவல்துறை மீட்டெடுத்தது  என்று அவர் நேற்று சிலாங்கூர் காவல் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மூன்று வெளிநாட்டு சந்தேக நபர்களுக்கும் THC எனப்படும் டெட்ராஹைட்ரோகன்னாபினால் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டதாகவும், மற்றொருவர் தொடர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஷாஸெலி கூறினார்.

சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் RM6,000 முதல் RM15,000 வரை பணம் கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் சமூக வருகை அனுமதிச் சீட்டுகள் மூலம் மலேசியாவிற்குள் நுழைந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

பல்வேறு மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களையும், RM3,000 மதிப்புள்ள இரண்டு கழுத்து சங்கிலிகளையும் காவல்துறை பறிமுதல் செய்தது.

இதனை அடுத்து, பிறருக்குச் சொந்தமான பயணப் பைகள் அல்லது பொருட்களை, அவற்றின் உள்ளடக்கங்கள் தெரியாமல் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஷாஸெலி பொதுமக்களை வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *