2025ஆம் ஆண்டுக்கான நம்பிக்கை விருது விழாவில் ‘சிறந்த எழுத்தாளர் விருது’ பெற்றார் கே.பாலமுருகன்

top-news

ஆக்கம்- தி. கிரிஷன்

 கடந்த 1997ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் மாத இதழாக செயல்பட்டு வரும் நம்பிக்கை இதழ் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தித் தொடர்ந்து பல்வேறு துறையில் சாதித்து வருபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ‘நம்பிக்கை நட்சத்திர விருதுகளை வழங்கி வருகிறது. கலைத்துறை பிரபலங்கள், மேடைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சினிமா துறை ஆளுமைகள் என இன்னும் பல துறைகளில் சாதனையாளர்களாகவும் ஆளுமைகளாகவும் திகழ்பவர்களை முறையே நடுவர் குழுமத்தின் வாயிலாகத் தெரிவுச் செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
அவ்வகையில் இவ்வாண்டு எழுத்துத் துறைக்கான பிரிவில் சிறந்த எழுத்தாளர் 2025 என்கிற விருதைக் கடாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், தமிழாசிரியர் கே.பாலமுருகன் பெற்றார்.

 கடந்த 20 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் பன்முகப் படைப்பாளியாகத் தம் எழுத்துப் பயணத்தை இடைவிடாமல் தொடர்ந்து வரும் கே.பாலமுருகன் இதுவரை நாவல், குறுநாவல், சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனக் கட்டுரைகள், சிறார் நாவல்கள், சிறார் சிறுகதைகள், ஹைக்கூ கவிதைகள் என 22 நூல்கள் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கலை, சமூக ஊடகம், இதழியல் என இன்னும் பல துறைகளிலும் எழுத்தாளர் கே.பாலமுருகன் தடம் பதித்துள்ளார் என்பது மேலும் கூடுதல் சாதனையாகும். குறும்பட இயக்குநர், குறும்படப் பயிற்றுநர் என அவருக்கு மேலும் பல முகங்கள் உள்ளன.

அதோடுமட்டுமல்லாமல் கே.பாலமுருகன் அவர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக நாட்டில் நடக்கும் பலவகையான இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராகவும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். தான்ஸ்ரீ மாணிக்கவாசகப் புத்தகப் போட்டியில் இரண்டு முறை நாவல் பிரிவுக்கு நடுவராகச் செயலாற்றியுள்ளார். 

மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரவை சிறுகதைப் போட்டிக்கும் இரண்டு முறை மாணவர் பிரிவு நடுவராகப் பணியாற்றியுள்ளார். மேலும், குறுங்கதை போட்டிகள், குறும்படப் போட்டிகள் எனப் பல போட்டிகளிலும் நடுவராகத் தொடர்ந்து தம் பங்களிப்பை ஆற்றி வருகிறார்.
இவருடைய சிறார் இலக்கியத்திற்கான பங்களிப்பு மிகவும் விரிவானதும் ஆழமானதும்கூட. 

கடந்த 2014ஆம் ஆண்டில் இவர் எழுதி வெளியிட்ட ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற சிறார் மர்ம நாவல்தான் மலேசியாவில் நூலாக வெளிவந்த முதல் தமிழ் சிறார் மர்ம நாவலாகும். அப்போதிருந்த 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்நாவலுக்கு வாசகர்களாக உருவாகி அலையெனத் திரண்டார்கள்.

 இச்சிறுவர் நாவல் மலேசியத் தமிழ்ச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையை உருவாக்கிவிட்டது; நிறைய இளம் வாசகர்களை உருவாக்கியது. அதன் பின்னர், கே.பாலமுருகன் ஏழு சிறுவர் மர்ம நாவல்களை எழுதிவிட்டார். அவர் எழுதியது மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் தேசிய நிலையிலான சிறுவர் சிறுகதைப் போட்டிகள் நடத்தி அவர்களையும் எழுத்தாளர்களாக அங்கீகரித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக மலேசியாவில் சிறார் இலக்கிய விழாவை முன்னெடுத்து வருகிறார்.


இதுவரை தம்முடைய இலக்கியப் படைப்புகளுக்காகவும் இலக்கியப் பணிகளுக்காகவும் எம்.ஏ இளஞ்செல்வன் விருது (2009), சி.கமலநாதன் விருது (2009), கரிகாற்சோழன் விருது (2010), பாரதி விருது (2011), தனி நாயகர் தமிழ் நாயகர் விருது (2018), ஆதி.ராஜகுமாரன் இலக்கிய விருது (2019), சோழன் விருது (2020), வ.உ.சி எழுத்தாளர் விருது (2021), விமர்சகன் சாதனையாளர் விருது (2025), பாஷோ ஹைக்கூ விருது (2025) எனப் பல விருதுகளை வென்றுள்ளார்.

 இவ்வாண்டு இறுதியில் அவருடைய ‘தலேஜூ’ என்கிற நாவல் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டு வெளியீடு காணவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தாம் எழுதுவதோடு மட்டுமல்லாமல் தமது அடுத்த தலைமுறை இளையோர்களுக்கும் சிறுவர்களுக்கும் தம் நேரத்தையும் ஆளுமையையும் கொண்டு இலக்கியத் துறையில் சிறந்த சேவைகளை வழங்கி வரும் கே.பாலமுருகன் அவர்களை வாழ்த்துகிறோம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *