அமேசான் காட்டில் வில் ஸ்மித் படப்பிடிப்பில் 24 அடி நீள அனகோண்டா!
- Muthu Kumar
- 11 Jan, 2026
அமேசான் மழைக் காடுகள் எப்போதும் ஆச்சரியங்களுக்குப் பஞ்சமில்லாதவை. தற்போது அங்கு உலகை அதிரவைக்கும் புதிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து வரும் ஆவணப்படப் படப்பிடிப்பின் போது, இதுவரை அறிவியலுக்குத் தெரியாத ஒரு புதிய வகை ராட்சத அனகோண்டாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நேஷனல் ஜியோகிராஃபிக் தொலைக்காட்சியின் "போல் டு போல்" ஆவணப்படத்திற்காக வில் ஸ்மித் மற்றும் குழுவினர் அமேசான் காடுகளில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரையன் ஃபிரை தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, 'வாவோரணி' (Waorani) பழங்குடியின மக்களுடன் இணைந்து 10 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த ஆய்வின் போது, இதுவரை யாரும் பார்த்திராத ஒரு புதிய வகை அனகோண்டா இனத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு 'வடக்கு பச்சை அனகோண்டா' (Northern Green Anaconda - Eunectes akayima) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பிடிபட்ட பாம்புகளில் ஒன்று 20.7 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இதுவே ஒரு சாதனையாகக் கருதப்படும் வேளையில், இந்தப் பாம்புகள் இன்னும் பெரிதாக, அதாவது 24 அடிக்கும் மேல் வளரக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதுவரை அமேசானில் ஒரே ஒரு வகை பச்சை அனகோண்டா இனம் மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், இந்த ஆய்வின் மூலம் அவை 2 வெவ்வேறு இனங்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுக்க முழுக்க நீர்வாழ் வாழ்க்கைக்குத் தகவமைத்துக் கொண்டவை. இந்த வகை அனகோண்டா காடுகளில் உள்ள மற்ற எந்த வேட்டைக்காரனையும் விட வலிமையானவை.
அமேசான் காடுகளில் இன்னும் பிரம்மாண்டமான பாம்புகள் இருப்பதாக அங்கிருக்கும் பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக நம்பி வருகின்றனர். தற்போதைய இந்தக் கண்டுபிடிப்பு அவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது. 24 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட பாம்புகள் இன்னும் அமேசானின் அடர்ந்த பகுதிகளில் மறைந்திருக்கலாம் என்ற ஆர்வம் ஆராய்ச்சியாளர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு அமேசான் மழைக்காடுகளின் மர்மங்களையும், அங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாப்பதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. பொழுதுபோக்குக்காகத் தொடங்கப்பட்ட ஒரு பயணம், இன்று உயிரியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



