நாட்டின் 30 பகுதிகளில் காற்று மாசு ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
கோலாலம்பூர், செப். 17-
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் புகைமூட்டம் காரணமாக, இன்று காலை 11 மணி நிலவரப்படி 30 பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (IPU) 110-ஐ தாண்டி ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் (JAS) காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பான APIMS இணையதளத்தின் தகவலின்படி, பேராக் மாநிலத்தின் தாசெக், ஈப்போ பகுதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக IPU 185 பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தின் ஸ்ரீ மஞ்சோங் பகுதியில் 181 பதிவாகியுள்ளது. கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி மற்றும் பேராக் மாநிலத்தின் பெகோ பகுதிகளில் தலா 160 என்ற அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் ஜோகான் செத்தியா பகுதியில் IPU 158 ஆக பதிவானது. பினாங்கின் செபராங் ஜெயா, மிண்டன், பேராக்கின் தைப்பிங் மற்றும் சரவாக்கின் கூச்சிங் ஆகிய பகுதிகளில் தலா 156 என்ற அளவில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
IPU அளவு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற காற்றுத் தரமாக வகைப்படுத்தப்படுகிறது. 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையாகவும், 300-ஐ கடந்தால் ஆபத்தான நிலையாகவும் கருதப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



